Skip to main content

எதையாவது சொல்லட்டுமா....16


சமீபத்தில் என் நண்பரும் டாக்டருமான செல்வராஜ் ஒரு இ மெயில் அனுப்பியிருந்தார். அதைப் படித்தவுடன் எனக்கு இரவெல்லாம் சரியாய் தூக்கமில்லாமல் போய்விட்டது. டாக்டர் செல்வராஜ் ஒரு சிறுகதை ஆசிரியர் கூட. வைத்தியம் பார்ப்பவர். 2 சிறுகதைத் தொகுப்பும், 2 மருத்துவ நூல்களும் எழுதி உள்ளார். உற்சாகமாக இருப்பவர். பார்ப்பவர்களையும் உற்சாகப் படுத்துவார். நோயாளிகளின் உடல் மட்டுமல்ல மனதையும் குணப்படுத்தவும் நினைப்பவர். அவர் அனுப்பிய இ மெயிலுக்கு வருகிறேன். தனிமையில் நீங்கள் இருக்கிறீர்களா? உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய இ மெயில் கட்டுரை. திகைத்து விட்டேன். ஹார்ட் அட்டாக் வரும்போது பக்கத்தில் டாக்டர் இல்லை. நீங்கள் எப்படி உயிர் பிழைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கட்டுரையின் சாராம்சம்.

அவர் கட்டுரையில் எல்லாவிதமான நியாயமும் இருக்கிறது. அவருடைய உலகம் நோயாளிகளையே சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அவருடன் சற்,று நேரம் கூட பேச முடியாது. அவர் தூங்கி எழுந்தால் அவர் முன்னால் நோயாளிகள்தான் தென்படுவார்கள் என்று தோன்றுகிறது. நானும் அவர் முன்னால் ஒரு நோயாளிதான்.

சரி, விஷயத்திற்கு வருகிறேன். என் 50வது வயதில் நான் ஒரு தப்பான முடிவை எடுத்தேன். அதாவது பதவி உயர்வுப் பெற்று சென்றதுதான் அது. அந்த முடிவின் அவலத்தை நான் பந்தநல்லூர் என்ற ஊரில் நான்கு ஆண்டுகள் பணி புரிந்தபோது உணர்ந்து விட்டேன். அப்போது நான் என் கண்ணால் பார்த்த 2 மரணங்களைப் பற்றிதான் ''பத்மநாபன் எதையோ தேடுகிறார்,'' என்ற பெயரில் ஒரு கதையே எழுதிவிட்டேன். அந்தக் கதை இந்த இதழ் விருட்சத்தில் பிரசுரமாகிறது. அந்த இரு மரணங்களும் ஹார்ட் அட்டாக்கால் ஏற்பட்டதுதான். எதிர்பாராத இடத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட மரணங்கள் அவை. உயிருக்குப் போராடிய அந்தத் தருணம் முக்கியமானது.

செல்வராஜ் என்ன செய்ய வேண்டுமென்று கட்டுரையில் எழுதியிருக்கிறார். அப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டவர்கள், தொண்டையைச் செருமிக் கொண்டே இருக்க வேண்டுமாம். சரியான மருத்துவரைப் போய்ப் பிடிப்பதற்குள்.

ஆனால் எனக்குத் தெரிந்து மாட்டிக்கொண்டவர்கள் மயக்கம் ஆகி விழுந்து விடுகிறார்கள். ஒரு பேராசிரியர் ஒரு பாட்டுக் கச்சேரிக்குத். தலைமைத் தாங்கி பேசி முடித்தவுடன், சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்துவிட்டார். மருத்துவ மனைக்குச் செல்வதற்குள் அவர் உயிர் போய்விட்டது.

சமீபத்தில் சினிமாத் துறையினரால் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில்கூட அரசு செய்தித்துறை புகைப்படக்காரர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.

என்னை அறியாமலயே பந்தநல்லூரில் உள்ள எங்கள் கிளையில் பணிசெய்து கொண்டிருந்த ஒரு ஊழியரை எதிர்பாராதவிதமாகக் காப்பாற்றி விட்டேன். கும்பகோணத்திலிருந்து பந்தநல்லூர் 30 கிலோமீட்டர் தூரம் இருக்கும். என் அலுவலக ஊழியர் காலையில் அலுவலகம் வந்தவுடன் ஒரு மாதிரியாக இருந்தார். சாப்பிட்டதை வாந்தி எடுத்தார். தலையை லேசாகச் சுற்றுகிறது என்றார்.

உடனே அவரை காரில் அழைத்துக் கொண்டு போனேன். கும்பகோணத்தில் உள்ள சுகம் என்கிற பெரிய மருத்துவமனையில் அவரைச் சேர்த்தேன். அவரைப் பரிசோதித்த டாக்டர். நீங்கள் அழைத்துக்கொண்டு வந்தவருக்கு பயங்கரமான மாரடைப்பு. அவர்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு உடனே தகவல் சொல்லுங்கள் என்றார். எனக்கு ஒரே திகைப்பு. அந்தப் பெரிய கண்டத்திலிருந்து அவர் தப்பித்து விட்டார். என்னை அறியாமலே ஒரு மாரடைப்பு வந்தவரைக் காப்பாற்றி விட்டேன்.

Comments

// தொண்டையைச் செருமிக் கொண்டே இருக்க வேண்டுமாம்.//

அது செருமல் இல்லை. இருமுதல். அதுவும் அழுத்தமாக வலுக்கட்டாயமாக தொடர்ந்து இரும வேண்டும்.

இதயத்திற்கு இரத்தம் போகும் வழியில் ஏற்பட்டிருக்கும் அடைப்பினால் இதயம் பிராண வாயு இழந்து தவிக்கிறது. அழுத்தமாக இருமுவது இரத்த குழாய்களை சற்றே விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை அதிகப் படுத்துகிறது. இதனால் மூளைக்கு பிராண வாயு வலுக்கட்டாயமாக செல்லும் என்று நம்புகிறார்கள்.

இதய வலி ஏற்படும் போது தன்னுணர்வுள்ள ஒருவர் வலுக்கட்டாயமாக இருமுவதால் ஓரளவு பயன் இருக்கலாம். ஆனால் அது முதலுதவியாகாது என்றும் சொல்கிறார்கள்.
Mukhilvannan said…
கையில் எப்பொழுதும் ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரை வைத்துக்கொள்ளுவது மிகவும் பயன்படும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.