Skip to main content

கையெழுத்து





ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பஞ்சாயத்து பள்ளிக்கூடத்திற்கு, நடந்து போனால் ஒரு குட்டிக்கதை முடிவதற்குள் போய்விடலாம். அதற்குமேல் படிக்கத்தான் வெகுதொலைவு நடக்க வேண்டியிருந்தது அந்த ஏரிக்கரை வழியாக. ஏப்ரல், மே மாதம் தவிர எல்லா மாதங்களிலும் வாய்க்காலில் தண்ணீர் போய்க்கொண்டே இருப்பதால் மிதிவண்டி வாங்கிக் கொடுத்தனுப்ப பயந்தாள் அம்மா. நாளுக்கு ஒரு கதை என்றிருந்த வழக்கம் இப்போதெல்லாம் மூன்று நான்கு என்றானது. வீட்டில் கதையேதும் கேட்டுவராத சிலர் ஏற்கனவே சொல்லிய கதையிலிருந்து பெயரை மாற்றி புதுவிதமாக ஏதாவது சொல்வார்கள். தேர்வில் முதலிடத்தைப் பிடிக்க எனக்கும் பண்ணையார் பொண்ணுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவும். இதனால் ஆசிரியர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் இருந்தது.

பாட்டும் விளையாட்டுமாக தினமும் பள்ளிக்கு சென்று வருகிற ஏரிப்பாதையின் ஓரங்களிலிருக்கும், ஒவ்வொரு புதர் மறைவுகளுக்கும் ஒற்றையடிப்பாதையொன்று செங்குத்தாக கீழ்நோக்கி இறங்கும். கொடிகள் படர்ந்து ஒருசில புதர்கள் மட்டும் பழங்கால குகையைப்போல பார்க்கவே பயமாக இருக்கும். அந்த இடங்களையெல்லாம் நாங்கள் எப்போதும் ஓடியேதான் கடப்போம் தப்பிக்கும் நோக்கத்துடன் சத்தமும் கூச்சலும் போட்டபடி. இந்தப் புதர் மறைவுகளில் தான், காலையிலும் மாலையிலும் ஊர்க்குடிகாரர்கள் ஒன்றுகூடி அவரவர் வலுவிற்கேற்பவும் வசதிக்கேற்பவும் கள் மற்றும் சாராயம் குடிப்பார்கள். பீடித் துண்டுகளும், வெற்றிலை எச்சில்களும், கெட்டவார்த்தைகளுமென அந்த இடமே அழகழிந்து இருக்கும். கட்டிப்பிடித்து சண்டை போட்டு செம்மண்ணில் உருளும் ஆட்களை பிரித்து விடுவதற்கென்றே சில தடித்த ஆட்களை கடைக்காரன் வேலைக்கு வைத்திருந்தான். இறைந்து கிடக்கும் காலியான பனையிலையிலான கோட்டைகளை கட்டெறும்புகள் மொய்த்துப் போதையில் உலவித் திரியும்.

குடிப்பவர்கள் பெரும்பாலும் விவசாய கூலிகள். பண்ணையாரிடம் வாங்கிய கூலியில் பாதிக்கேனும் குடித்துத் தீர்த்து விடுவார்கள். ஊரில் அவருடைய நிலம் தான் பெரியது. மற்ற குறுநில விவசாயிகளால் நெல் மட்டுமே பயிரிட முடிந்தது. அப்பாகூட சொந்த நிலத்தில் வேலை செய்தது போக, கூலிக்கும் அவ்வப்போது போய்வருவார். முதலில் வேலைப்பளு காரணமாய் குடிக்கத் தொடங்கிய அவர் கொஞ்சம் கொஞ்சமாய் வேலை இல்லாத நாட்களிலும் குடிக்கத் தொடங்கினார். அம்மா எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தும் அவர் குடிப்பழக்கத்தை விடுவதாய் இல்லை. ஆடுமாடுகளுடன் ஓடிச் சோர்ந்தவளுக்கு அவரின் குடிப்பழக்கம் பெரும் வேதனையைத் தந்தது. குடும்பத்தில் வருவாய் குறைந்து சேமிப்பு கரையத் துவங்கியது. என் கைச்செலவிற்கு அம்மா கொடுக்கும் பணம் குறைந்து போனது. இதனால் கிழவி கடைக்கு என்னோடு மிட்டாய் வாங்கி உண்ண வருபவர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் குறைந்தது. தங்கச்சி அப்பாவைக் கண்டால் பயப்படத் தொடங்கினாள். தள்ளாடித் தள்ளாடி நடக்கும் அவர் மேல் சாமி வந்துவிட்டதாக என்னிடம் கூறுவாள்.

டேய் குமார் உங்க அப்பா மாட்டு சாணம் கிடந்ததுகூடத் தெரியாமல் நேற்று சாயங்காலம் கருவேல மரத்தடியில் படுத்துக் கிடந்தார்டா. அவர் முகம் பூரா ஈக்கள் மொச்சி ஒரே அருவருப்பா இருந்தது. உங்க அப்பா ஒரே அழுக்குடாஎன்று சொல்லி, வாந்தி எடுப்பவர்கள் போல ஒலியெழுப்பி கேலி செய்யத் தொடங்கினார்கள் என்னோடு வருபவர்கள். குடித்து விட்டு வேலையை ஒழுங்காகச் செய்வதில்லை என்பதால் பண்ணையார் அப்பாவை வேலைக்கு வரச் சொல்லவதில்லை இப்போதெல்லாம். அம்மா முன்பை விடவும் தன்னை வருத்திக் கொண்டாள். தன்னிடமிருந்த சில நகைகளையும் சாராயக் கடைக்காரனிடம் அவர் வாங்கிய கடனுக்கு கொடுத்து விட்டாள். அவளுக்கு சோற்றை விட தன்மானம் தான் முக்கியம். கிடப்பில் இருந்த தானியங்களை விற்றும் போதாதற்கு சில ஆடுகளை விற்றுமென எப்படியோ இரண்டு வருடங்கள் ஓடிப்போனது.

ஏழாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு போனபோது புது நோட்டு புத்தகங்கள் வாங்க காசே இல்லை. இதனால் என்னை வாத்தியார் தினமும் வகுப்புக்கு வெளியிலேயே நிறுத்தினார். வெறுங்கையை வீசீட்டு இங்கென்ன மதியம் போடுற சோத்தை சும்மா திங்க வந்தியாஎன்று திட்டுவார். இத்தனை நாளும் அன்பொழுகப் பேசிவந்த ஆசிரியர்களே என்னை இப்படி நடத்துவது கண்டு எனக்கு அழுகையாய் வரும். இதற்கெல்லாம் காரணமான அப்பாவை வெறுக்க ஆரம்பித்தேன். பகலிலேயே ஓடிக் கடக்கும் அந்த இடத்தில், யாரும் இல்லாத இரவு நேரத்தில், அவர் வழக்கமாக போகும் கடைக்கு தீ வைத்தேன். ஆனால் அவர்கள் மரநிழலில் கடையை வைத்து நடத்த ஆரம்பித்தார்கள். பண்ணையார் வீட்டில் எருமைகளை மேய்க்க ஆள் தேவைப்படுவதாக கேள்விப்பட்ட அப்பா இன்னும் சில நாட்கள் நான் பள்ளிக்குச் செல்லாமலிருந்தால் என்னை அங்கே சேர்க்கும் முடிவில் இருந்தார். மழை காலத்திற்கு சேமிக்கும் எறும்புகளைப் போல, மிகவும் ரகசியமாய் யாருக்கும் தெரியாமல் கற்றாழை கயிற்றில் வந்த பணத்தை சேர்த்து வைத்திருந்த அம்மா எனக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து பள்ளிக்கு அனுப்பினாள்.

அப்பா தினமும் குடிக்க ஆரம்பித்து விட்டதால் வீட்டில் சண்டை இல்லாத நாளே இல்லை. அவரிடமிருந்து அம்மாவை காப்பாற்றுவதிலேயே என் இரவுப் பொழுதுகள் கழிய ஆரம்பித்தன. அவள் அழுவதை பார்த்து செல்வியும் அழுவாள். அப்பா பீடியை பற்றவைத்துக் கொண்டு வெளியில் போய் படுத்துக் கொள்வார். எங்களின் படிப்பு நின்றுவிடக் கூடாதென அவளின் அப்பா வீட்டிற்கு கூட போவதில்லை அம்மா. முந்தைய வகுப்புகளிலெல்லாம் படிப்பில் கெட்டியாக இருந்த நான் இப்போதெல்லாம் சரிவர படிக்க முடிவதில்லை. பண்ணையார் பொண்ணு என்னை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தாள். வகுப்பில் என்னை கேலி செய்பவர்களை அடிக்கலானேன். வாத்தியார்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து போனது.

முன்பெல்லாம் தேர்வுச் சமயமென்றால் பக்கத்துக்கு வீட்டு மின்விளக்கு வெளிச்சத்தில் படிக்க போய்விடுவேன். பள்ளிக்கூடத்தில் என்னை கேலி செய்ததற்காக அவனை புரட்டியெடுத்த நாளிலிருந்து, என்னை அவன் பெற்றோர்கள் சேர்த்துக் கொள்வதில்லை. கண்களை சிமிட்டும் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலும், அப்பா போடும் சண்டையாலும் சரியாகப் படிக்க முடியாமல் போக, பயந்தது போலவே முதல் முறையாக மதிப்பெண் அட்டையில் ஒரு சிகப்பு கோடு விழுந்து விட்டது. தேர்வில் தவறியவர்களை ஆசிரியர்கள் அதிக கவனத்தோடு பார்ப்பார்கள். முந்தைய வருடத்திய மதிப்பெண் அட்டையில் இருக்கும் அப்பாவின் கையெழுத்தோடு இந்த முறை நான் வாங்கி வந்த கையெழுத்து ஒத்துப் போகவில்லை. இந்த வயசிலேயே திருட்டுத்தனம் பண்றயாஎன்று உடலெல்லாம் சிவக்க அடித்தார்கள்.

எத்தனையோ முறை அப்பாவின் கையெழுத்து தானென்று சொல்லிப் பார்த்தும் அவர்கள் என்னை விடவில்லை. தங்கச்சி சொன்ன சாட்சியும் எடுபடவில்லை. அடிவாங்கி மயக்க நிலையில் கிடந்த அம்மாவையும் சாட்சி சொல்ல வைக்க முடியவில்லை. கையெழுத்து போட்ட நாளன்று போதையில் இருந்ததால் பள்ளிக்கு வந்த அப்பாவும் கையெழுத்து அவருடையதில்லை என்று சொல்லிவிட எல்லோருமாக என்னை கேவலமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள் அன்று முதல். இனிமேல் மதிப்பெண் அட்டையில் கையெழுத்து வாங்கும் முன் அப்பாவை குடிக்கச் செய்துவிடவேண்டுமென்று முடிவெடுத்தேன்.

Comments

அருமையான எழுத்து நண்பா.. வாழ்த்துகள்
Umabathy said…
மிக மிக அருமை.