Skip to main content

நான், பிரமிள், விசிறிசாமியார்......13



எனக்குத் தெரிந்தவரை பிரமிளுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் அவருடன் பழகிய இளமை கால நண்பர்கள், அவர் கஞ்சா அடிப்பார் என்று என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்கள். என்னால் இதை நம்ப முடியாது. நான் பழகியவரை அவர் கஞ்சாவும் சரி, எந்த மதுபானங்களும் குடிப்பவரில்லை. அடிக்கடி டீ குடிப்பார். தானே சமையல் செய்து கொள்வார். இன்னொரு பழக்கம். அவர் எல்லாரிடமும் பணம் வாங்க மாட்டார். யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம்தான் கேட்பார். அதேபோல் என்ன தேவையோ அதை மட்டும் கேட்பார்.


ஆரம்ப காலத்தில் எனக்கு வங்கியில் அதிக சம்பளம் இல்லை. இருந்தாலும் என்னிடம் ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் கேட்க மாட்டார். சிலசமயம் கேட்காமல் என்னைப் பார்க்கக்கூட வருவார். அவரைப்போல் நடக்க யாராலும் முடியாது. பல இடங்களுக்கு பெரும்பாலும் அவர் நடந்தே செல்வார். அவர் வயதில் கையெழுத்து தெளிவாக இருக்கும். ''ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் கையெழுத்து பிரமாதமாக இருக்கிறதே,'' என்பேன். ''நீர் கண்ணுப் போடாதீர்,'' என்பார்.


இன்று பிரமிளைப் புகழ்பவர்கள் ஒரு காலத்தில் அவர் கிட்டவே நெருங்க முடியாது. யாரையாவது அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தொலைந்தார்கள். எழுதி எழுதியே அவர்களைத் தொலைத்துக் கட்டிவிடுவார். அவரை யாரும் திட்ட முடியாது. ஆரம்பத்தில் அவர் தங்குவதற்கு இடம், சாப்பிட தேவையான சாப்பாடு என்று ஏற்பாடு செய்தால், அவர் தொடர்ந்து எதாவது செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றியது. இதை ஆரம்ப காலத்தில் அவருக்கு உதவி செய்த டேவிட் சந்திரசேகரிடம் குறிப்பிட்டேன். ''நாலைந்து பேர்கள் சேர்ந்தால், அவர் தேவையை நாம் பூர்த்தி செய்யலாம்,'' என்று சொன்னேன். ''நான் உதவி செய்கிறேன். நாலைந்து பேர்களைச் சேர்க்க முடியாது,'' என்று டேவிட் கூறிவிட்டார்.


நான் நவீன விருட்சம் என்ற பத்திரிகை தொடங்கப் போகிறேன் என்பதை அறிந்து என் அப்பாவிடம், ''சும்மா இருக்கச் சொல்லுங்கள்,'' என்றவர்தான் பிரமிள். அதே பிரமிள் பின்னால் ஒரு கட்டத்தில் விருட்சம் இதழை நிறுத்த வேண்டும் என்று நினைத்தபோது, என் எண்ணத்தை மாற்றியவர்.


ஆரம்பத்தில் விருட்சத்திற்கு பிரமிள் கொடுத்த படைப்புகள் எல்லாம் அரசியல். ஒருமுறை அவர் நீண்ட கவிதை ஒன்றை விருட்சத்திற்கு அனுப்பியிருந்தார். அது சுந்தர ராமசாமியின் கவிதையைக் கிண்டல் செய்து எழுதப்பட்ட ஒன்று. நான் பிரசுரம் செய்யவில்லை. சங்கடமாக இருந்தது. அவர் கொடுத்த இன்னொரு கவிதை வன்முறை. கவிதை வாசிப்பவரை நோக்கி கவிதை நகரும். ''இதைப் படிப்பவர்கள் டிஸ்டர்பு ஆகிவிடுவார்கள்,'' என்றேன். ''மேலும் எனக்கே இக்கவிதையைப் படித்தால் ராத்திரி தூக்கம் வராமல் போய்விடும்,'' என்றேன். பிடித்துக்கொண்டார் பிரமிள். அவர் கவிதையை வாசித்துவிட்டு நான் தூங்காமல் போனதைப் பற்றி எல்லோரிடமும் சொல்லியிருக்கிறார்.

Comments

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com