Skip to main content

சில நேரங்களில் சில மனிதர்கள்

-

கணீர் குரலுக்கு சொந்தக்காரர்

கன்னையா ஓதுவார்.

தேவாரம் பாடும் போதெல்லாம்

கேட்பவருக்கு கண்ணீரே

வருமென்பார் அப்பா

அவர் இறந்த நாளொன்றில்

யார் கண்ணிலும் நீர் இல்லை.

அவர் தேவாரம் பாடாததுதான்

காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்

அந்த நாளில்.

அசராமல் கரகம் ஆடக் கூடியவள்

மேலத் தெரு மஞ்சுளா

கரகம் அசையாமல்

கண்ணில் ஊசியெடுத்தபடியே

காலில் படம் வரைபவள்.

சமீபத்தில் ஜாக்கெட்டில் குத்தப் பட்ட

நூறு ரூபாய்களுடன் பார்க்கும் போது

எடை அதிகமென இறக்கி வைத்திருந்தாள்

கிளி மூக்கை நீட்டியிருக்கும் கரகத்தையும்

இன்னும் சில ஆடைகளையும்

உலகில் சூரியன் உள்ளவரை

உனை மறவேன் என

எதுகை மோனையுடன்

எழுதிக் கொடுத்தவனை

வாரச்சந்தையில் பார்த்த பொழுது

அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.

சூரியன் இல்லாத அவன் உலகை நினைத்து

கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

காரைவீட்டு பெரியசாமி அண்ணாச்சியென்றால்

எல்லார்க்கும் பயம்

மீசைக்காக சிறுவர்களும்

காசுக்காக பெரியவர்களும் அடங்குவார்கள்.

தளர்ந்த அவரைப் போனவாரம் பார்த்த பொழுது

“கான்கிரீட் ஊருக்குள்ள

காரைவீட்டுக்கு மதிப்பில்லப்பா”என்றார்.

கடனை அடைப்பதற்காய் சொல்லி

துபாய் போன சங்கிலி

திருமணம் முடிந்து திரும்பி வந்தான்.

வெளியூர் வேலைக்குக்கூட

அனுப்ப மாட்டாள் மனைவி

அத்தனை பாசமென்றான்.

யார் கண்டது

சக்களத்தி பயமாய் இருக்கலாம்.

முந்நூற்றுஅறுபத்துஏழாவது முறையாய்

மஞ்சள் சுடிதாரில் வருகிறாய்

ஏன் வேறு நிறமில்லையா

என்றேன் கெளரியிடம்.

இப்படி நீ

நியாபகம் வைத்திருப்பதை கேட்பதற்காகத்தான்

என்றாள்

Comments