Skip to main content

நான் பிரமிள் விசிறி சாமியார்.....14


நான் இந்தத் தொடரை எழுதவே மறந்துவிட்டேன். இப்போது திரும்பவும் ஆரம்பிப்பதற்குள் என்ன எழுதினேன் என்பதை நினைவுப் படுத்திக்கொள்ள வேண்டும். திரும்பவும் நான் எழுதியதை எடுத்துப் படிக்க வேண்டும். ஏனென்றால் சொன்னதையே திரும்பவும் சொல்லக்கூடாது. ஆத்மாநாம் இரங்கல் கூட்டத்தின்போது பிரமிள் கலந்துகொண்டு பேசியதை எழுதியிருந்தேன். அதில் சில தகவல்களைக் கூறியிருந்தேன். அந்தத் தகவல்களில் சிலவற்றை நான் மறந்து விட்டேன். வங்கியில் பணிபுரிவது ஒரு பக்கம் இருந்துகொண்டாலும், பல படைப்பாளிகளைச் சந்தித்துப் பேசுவது என் பொழுதுபோக்கு. பொழுதுபோக்கு என்று சொல்வதைவிட உபயோகமான விஷயம். இப்போதெல்லாம் அதுமாதிரி நடப்பதில்லை. முன்பு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் வருவது எளிதான விஷயம். பார்க்கலாம். பேசலாம். திரும்பவும் போய்விடலாம். பிரமிள் எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்றுவிடுவார். அவர் நுங்கம்பாக்கம் ஹைரோட் வழியாக நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.


நானும் அவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அப்படி சந்தித்துக்கொள்ள முடியாவிட்டால், இவரை ஏன் சந்திக்க முடியவில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். அடிக்கடி ஒருவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராமல் அவரைச் சந்திக்காமல் இருந்தால் இதுமாதிரி தோன்றும். இப்போதுள்ள செல்போன் வசதி அப்போது இல்லை. பிரமிளை பெரும்பாலும் என் அலுவலகக் கட்டிடத்தில் மதியம் உணவு உண்ணும் வேளையில் சந்திப்பேன். அவருக்கு எதாவது சாப்பிட வாங்கிக்கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இப்படி அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது வேறு எழுத்தாள நண்பர்களையும் நான் சந்திப்பேன். பிரமிளுடன் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, ரா ஸ்ரீனிவாஸனை சந்தித்து விட்டேன். இந்தத் தகவலை நான் எழுதியிருக்கிறேன் மேற்படி ஆத்மாநாம் இரங்கல் கட்டுரை எழுதியபோது. இதில் என்ன சிக்கல் என்றால், பிரமிள் தமக்குப் பிடித்தமானவர்களை மட்டும்தான் பார்ப்பார் .இயல்பாகப் பேசுவார். இது அவருடைய சுபாவம். ரா ஸ்ரீனிவாஸனைப் பார்த்தபோது அவர் ஞானக்கூத்தனுடன் தொடர்புப் படுத்திக்கொண்டு விட்டார். இது பிரச்சினை ஆகிவிட்டது. நான், ஸ்ரீனிவாஸன், பிரமிள் மூவரும் கான்டினில் டிபன் சாப்பிடச் சென்றபோது, பிரமிள் உரத்தக் குரலில், 'நான் அப்படித்தான் மூச்சு விடுவேன்...பிறர் மேல் மூச்சு விடுவேன்..' என்ற சத்தமாகக் கூறினார். இது நான் எதிர்பாராதது. ஏன்எனில் என்னுடன் தனிமையில் இருக்கும்போது இதுமாதிரியெல்லாம் வெளிப்படுத்த மாட்டார். ஸ்ரீனிவாஸனைப் பார்த்தவுடன் அதுமாதிரி பேச ஆரம்பித்து விட்டார். ஞானக்கூத்தன் கவிதை ஒன்றில் எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் பிறர் மேல் விட மாட்டேன் என்று எழுதியிருப்பார். பிரமிளுக்கு ஸ்ரீனிவாஸனைப் பார்த்தபோது அவர் ஞானக்கூத்தன் கட்சியைச் சேர்ந்தவர் என்று எண்ணிவிட்டார். உண்மையில் அப்படியெல்லாம் கட்சி கிடையாது. எல்லோரும் கவிதைகள் எழுதத் தெரிந்தவர்கள். அவ்வளவுதான். மேலும் ஸ்ரீனிவாஸன் பிரமாதமாக பல கவிதைகளை எழுதியிருக்கிறார்.


இந்த இடத்தில் நான் தவறாக முந்தைய கட்டுரையில் எழுதிவிட்டேன். பிரமிளைப் பார்த்தவுடன் ஸ்ரீனிவாஸனுக்கு சங்கடம் ஏற்பட்டு விட்டது என்று. உண்மையில் அந்தச் சங்கடம் எனக்குத்தான் என்று எழுதியிருக்க வேண்டும். இந்தத் தவறை ஸ்ரீனிவாஸன் சுட்டிக் காட்டி உள்ளார். மேலும் சாப்பிட உட்கார்ந்தபோது பிரமிள், ஞானக்கூத்தனை 'ஞானக்கூத்தன்...கேனைக்கூத்தன்' என்று குறிப்பிட்டதாக ஸ்ரீனிவாஸன் என்னிடம் கூறி உள்ளார். இது எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஸ்ரீனிவாஸன் இது குறிப்பிட்டு உங்கள் கட்டுரையில் இதைக் குறிப்பிட வேண்டும் என்று கூறி உள்ளார். அவரே இந்தத் தவறை சுட்டிக்காட்டி எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நான் பழகிய நண்பர்களில் பிரமிள் ஒருவிதம் என்றால் ஸ்ரீனிவாஸன் இன்னொரு விதம். பிரமிள், ஸ்ரீனிவாஸனை ஒருசேர பார்த்தபோது நான் சங்கடப் பட்டது உண்மைதான். ஆனால் அதுமாதிரி நிகழ்ச்சி இப்போது ஏற்பட்டால் சங்கடப் பட்டிருக்க மாட்டேன்.


அதன்பின் பிரமிள் ஸ்ரீனிவாஸனை என் அலுவலகத்தில் பார்க்கும்போது, 'உங்கள் நண்பர் வந்துவிட்டார்..நான் போகிறேன்...' என்று ஓட்டமாய் ஓடிவிடுவார். அன்று ஸ்ரீனிவாஸன் பிரமிள் சொன்னதைக் கேட்டு வெறுமனே புன்னகைத்துக் கொண்டாரே தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.

Comments

K V SURESH said…
படிக்க நன்றாக இருந்தது
விசிறி சாமியார்? எங்கே?