Skip to main content

குவளைகளில் கொதிக்கும் பானம்

வரிசையாய் இருக்கும் மண் குவளைகளில்
ஒழுங்கு தவறாது ஊற்றுகிறேன் கோபங்களை.
நகர்த்த இயலாத சுடு வெயில் போல
அறையெங்கும் பரவி இருக்கிறது மௌனம்.
கேள்விகளின் பிடிவாத நகர்த்தலில்
வட்டங்களில் சுழல ஆரம்பிக்கிறது
குவளைகளில் கொதிக்கும் பானம்.
காணாத காட்சி என கண்கள் சொல்ல
கிடைக்கும் தாள்களில் வரையத் துவங்குகிறேன்
ஒழுங்கற்றுப் பரவும் வண்ணங்களைத் தீட்டி.
தூரிகையின் வேகம் உச்சத்தில் ஏற ஏற
தாளில் துலங்கும் காட்சிகளும்
துரித நடனம் ஆடும் குவளைகளும்
ஒன்றின் மேல் ஒன்றாய் மிகச் சரியாய்.
வெந்து தணிகிறது வெப்பம்.
முடிந்த ஓவியத்தை மேசையில் வைக்கிறேன்
நிதானமாய் - பிறிதொரு வேளை
நின்று யோசிக்கவும், கடந்து செல்லவும்.
-

Comments