Skip to main content

Posts

Showing posts from March, 2011

எதையாவது சொல்லட்டுமா........39

குளிர் காலத்தைவிட கோடைகாலம் மிகக் கடுமையானது. அதுவும் என் அலுவலகக் கட்டிடத்தை விட மட்டமானது எதுவுமில்லை. காலையில் மயிலாடுதுறையில் 6 மணிக்கு மின்சாரத்தை நிறுத்தினால் 9 மணிவரை ஆக்கி விடுகிறார்கள். சூடு பறக்கும் தேர்தல் நேரம் வேறு. யாருக்கு நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள் என்று யாரும் என்னை கேட்கவில்லை. நானே கேட்டுக்கொள்கிறேன். போனமுறை என் பெயரும், நடிகர் கமல்ஹாசன் பெயரும் வாக்களர் பட்டியலில் இல்லை. என் பெயர் இல்லை என்பதைப் பற்றி யாரும் கவலைப் பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் கமல்ஹாசன் பெயர் விடுப்பட்டிருந்தது எல்லாப் பத்திரிகைகளிலும் வந்துவிட்டது. நான் சாமான்யன் என்பதை அடிக்கடி நினைத்துக்கொள்வேன். சரி யாருக்கு ஓட்டுப் போடுவது. ஒவ்வொரு முறையும் நான் ஓட்டுப் போடும்போது எல்லாக் கட்சிகளிலும் ஓட்டுப் போடுவேன். சிலசமயம் முகம் தெரியாத தனித்து நிற்கும் நபர்களுக்கு ஓட்டுப் போடுவேன். அல்லது ஓட்டே போடாமல் போய்விடுவேன். ஓட்டுப் போட்டு எதாவது கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மக்களுடைய குறையைத் தீர்க்க முடியாது. பெரிய புரட்சியை செய்து விட முடியாது. ஆனால் நியாயமான நிர்வாகத்தை வெளிப்படுத்தின

எது கவிதை........3

எனக்கு அலுவலகம் போகும்போதுதான் கவிதையைப் பற்றி சிந்திக்க சரியான நேரம். கவிதையைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள்தான் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். சீனா சென்று வந்த என் நண்பர் ஒருவர், 'நீங்கள் அங்கு சென்றால், அங்கு கவிதை எழுத ஏராளமான இடம் இருக்கும். உங்களை நினைத்துக்கொண்டேன்,' என்றார். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. கவிதை எழுதுவது ஒருவித மனநிலை. அதற்கும் கவிதை எழுதுவதற்கும் எந்தச் சம்மதமும் இல்லை. எங்கு சென்றாலும் கவிதையும் எழுத முடியும் அல்லது எழுத முடியாது. பெரும்பாலும் எனக்குக் கவிதை எழுத பஸ் ஸ்டாண்டில் பஸ் பிடிக்க நிற்கும்போதுதான் தோன்றும். அதே சமயத்தில் வலுகட்டாயமாக கவிதையும் எழுதக் கூடாது. ஆனந்த்தை ஒரு முறை அவர் அலுவலகத்தில் சந்திக்கச் சென்றேன். 'விருட்சத்திற்கு எதாவது கவிதை இருந்தால் கொடுங்கள்,' என்று கேட்டேன். 'கொஞ்ச நேரம், இருங்கள்,' என்று கூறியவர். உடனடியாக ஒரு பேப்பரை எடுத்து கவிதையை எழுத ஆரம்பித்து விட்டார். எழுதியதைக் கொடுத்தும் விட்டார். 'எப்படி இது மாதிரி?' என்று கேட்டேன். 'நீங்கள் கேட்டவுடன் எழுதி

இரவும் பகலும்

ஏழு வண்ணங்களோடும் களித்து களைத்த ஏழு கடல்களும் பகலை பரந்து உள் வாங்கிக் கொண்டன. இருளின் மயக்கத்தில் இமைகள் மூடின. பலரின் வீட்டிற்கும் பலரும் வந்தார்கள். காந்தி வந்தார். ஒபாமா வந்தார். கலாம் வந்தார். கிளின்டன் வந்தார். எம்.ஜி.ஆர் வந்தார். சுந்தர ராமசாமி வந்தார். க.நா.சு வந்தார். பழைய பேப்பர்காரன் வந்தான். வீரப்பன் வந்தான். திருடர்கள் வந்தார்கள். இவர்களோடு கடவுளும் வந்தார். உயிரோடு இருப்பவர்கள், உயிரோடு இல்லாதவர்கள் சிங்கங்கள், புலிகள் என எல்லாமே யாருக்கும் தெரியாமல் அவரவர் உலகத்துள் வந்து போயினர். இருண்ட ரகசியங்களோடு இமைகள் புதைந்திருக்க பரந்த வானத்தின் இருளைத் துடைத்தெடுத்த பகல் காத்திருக்கிறது சிறிய இமைகளின் வெளியே வேட்டை நாயாய் மூடிய இமைகளுக்குள் முடங்கிய இருண்ட உலகின் இருளைத் துடைத்தெடுக்க.

மொழம்

'பண்டிகை நேரம் பதினஞ்சு ரூவாய்க்குப் பைசா குறையாது மொழம்' காசில் கறாராய் இருந்தாலும் களை கட்டியிருந்தது அவள் கடையிலே வியாபாரம். வந்து நின்ற பேருந்திலிருந்து இறங்குகிறாள் ஒரு இளந்தாய் கன்னப் பொட்டில் திருஷ்டி கழிந்த மூன்று குட்டித் தேவதைகளுடன். எண்ணெய் வைத்து வாரிமுடித்த பூச்சூடாப் பின்னல் நுனிகள் பச்சை மஞ்சள் ஊதா ரிப்பன்களில். கூடைமல்லி பார்த்ததுமே தவிப்பாகிக் குழந்தைகளை இழுத்துக் கொண்டு வேகமாகக் கடந்தவளைக் கூவி அழைத்துக் கொடுக்கிறாள் பூக்காரம்மா 'அம்மாவா நினைச்சு சும்மா புடி தாயீ’ என்று நாலு முழம் அளந்து மணக்கும் ரோஜா நாலு சேர்த்து. *** *** ***

பிறிதொன்று

கோலமிட குனிந்தவள் மீது பனித்துளி விழுந்தது ஊரையே கழுவி துடைத்து வைத்திருந்தது நேற்றிரவு பெய்த மழை சகதியில் உழலும் பன்றிகள் சந்தன வாசனையை அறியாது நரகல் தின்னும் நாய் காலை வேளையில் குளத்துக் கரையையே சுற்றி வரும் காற்று கேட்ட கேள்விக்கு விடைதெரியாமல் மரங்கள் இலை உதிர்த்தன வெண்மேகம் மயிலுக்கு என்ன துரோகம் செய்தது வீதியில் நடப்பவர்கள் மற்றவர் முகம் பார்த்து நடப்பதில்லை நெல் கொறிக்கும் சிட்டுக்குருவி எப்படி விளைந்ததென்று அறியாது.

கோடையின் உவப்பு

இந்த கோடையின் வெம்மை இனிமையானதொரு உவப்பை வெளியிடுகிறது. ஒரு பழங்கால அறையை போன்ற இந்த பூமி அதன் ஆதி சாயல் துலங்கித் தெரிய இலைகள் உதிர்த்த பற்பல கிளைகள் வழி வானைக் கண்ணுக்குள் அணுக்கி வைக்கிறது. ஒரு மங்கலான சோபை வழியும் நான்கு மணி மனிதர்கள் விருப்பு வெறுப்பற்ற ஞானியராய் பேருந்தில் சாய்ந்தபடி இருக்கிறார்கள் அவர்களின் பார்வையற்ற பார்வை கலைக்க முடியாதொரு அமைதியை வழியெங்கும் பேசிச் செல்கிறது பயணம் முடிந்து திரும்பும் வேளை அந்தியின் சோபை அவர்களை அழகூட்ட மெல்லக் கரைகிறார்கள் கோடையின் உவப்பில் பின்/ பழங்களாய் சூரியன் தணிய கனிந்து விம்முகிறது கோடைப் பழம்.

போர்ப் பட்டாளங்கள்

மேசையில் ஊர்வலம் போகும் குதிரைப் பட்டாளங்களைப் பார்த்திருந்த சிறுவன் உறங்கிப் போயிருந்தான் சிப்பாய்களிறங்கி தப்பித்து வந்த முற்றத்தில் யானைகளின் நடனம் தூரத்து மேகங்களிடையிருந்து திமிங்கிலங்கள் குதித்திட பாய்மரக் கப்பல்களின் பயணம் கைகொட்டிச் சிரிக்கும் குழந்தையின் காலடியில் படை வீரர்களின் வாட் போர் கதை சொல்லும் தங்கையின் மொழியில் கடற்குதிரை நடை சிங்க வேட்டை சுவர்ப்படத்தின் கீழே சிறுவனிடம் கதை கேட்கும் கிழச் சிங்கம் விளக்கின் நிழலில் குள்ளநரி கூடையில் இரட்டைக் குழந்தைகள் தாலாட்டும் அம்மாவின் புத்தகத்தில் கதைமாந்தர்களின் உறக்கம் செதுக்கிய மரச் சிற்பங்களிடையிருந்து எழுந்து நிற்கும் புதுச் சிலை அப்பாவின் கை தொட்டு உரத்துப் பேச ஆரம்பிக்கிறது நிலவிலிருந்து இறங்கிவரும் பாலம் யன்னல் கதவிடையில் முடிய கட்டிலுக்கு இறங்கி வருகின்றனர் தேவதைகளும் சாத்தான்களும் ஒருசேர படுக்கையில் எழுப்பிய மாளிகை உச்சிகளில் கொடிகள் பறக்கின்றன வழமை போலவே கீற்றுப்படைகளோடு வந்த ஒளி மூடியிருந்த கண்ணாடி யன்னலோடு போரிட சிதறிய வெளிச்சம் அறை நிரப்பி என் கனவு கலைத்திற்று

ஜோல்னாப் பைகள்

விதம்விதமாய் ஜோல்னாப் பைகளை சுமந்து வருவேன் பார்க் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் கூவி விற்பார்கள் ரூபாய்க்கு பத்தென்று வகைவகையாய்ப் பைகளை வாங்குவேன் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏனோ பிடிப்பதில்லை நான் வாங்கும் ஜோல்னாப் பைகளை பைகளில் ஸ்திரமற்ற தன்மையை கொஞ்சம் அதிக கனமுள்ள புத்தகங்களை சுமக்காது ஓரம் கிழிந்து தொங்கும் இன்னொரு முறை தையல் போடலாமென்றால் மூன்று பைகளை வாங்கும் விலையை வாய்க்கூசாமல் கேட்பார்கள் ஜோல்னாப் பைகள் மெது மெதுவாய் நிறம் மாறி வேறு வேறு விதமான பைகளாய் மாறின ஆனால் என்னால் பைகளை விடமுடியவில்லை உறவினர் வீட்டிலிருந்து அளவுக்கதிமாய் தேங்காய்களை உருட்டிவர சாக்குப் பைகள் தயாராயின மைதிலிக்கு மனசே வராது என்னிடம் பைகளைத் தர வீட்டில் புத்தகக் குவியலைப் பார்க்கும் கடுப்பை பைகளில் காட்டுவாள் ஆனால் என்னால் பைகளை விடமுடியவில்லை பைகளில் இன்னது என்றில்லாமல் எல்லாம் நுழைந்தன சுதந்திரமாய் வீரன் கோயில் பிரசாதம் மதியம் சாப்பிடப் போகும் பிடிசாதம் வழுக்கையை மறைக்க பலவித நிறங்களில் சீப்புகள் உலக விசாரங்களை அளக்க ஆங்கில தமிழ் பத்திரிகைகள் சில க.நா.சு கவிதைகள் புத்தகங்கள் எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கும்

சாராசரிக்கு​ம் சராசரி

இந்த அறை இதற்கு முன்பு எத்தனை பேரைப் பார்த்திருக்கும் பேத்தியின் அந்தரங்கங்களைத் தடவிப்பார்த்த ஒருவன் சுருக்குக் கயிற்றின் முனையில் காதலை முடித்துக் கொண்ட ஒருவன் சாராசரிக்கும் சராசரியில் உறக்கத்தில் இறந்த ஒருவன் மற்றும் இந்த அறையைப்போல் வாழ்க்கை இறைஞ்சும் உங்களுக்குத் தெரிந்த ஒருவன். 0 மரமொன்று நகரத் தொடங்குகிறது இலைகளைச் சலசலத்தபடி வேர்களின் நீளத்தை அளந்தபடி நிழல் குறித்த பெருமிதங்களுடன் கனிகளை வேடிக்கைபார்ப்பவன் முகத்தில் எறிந்தபடி நகரும் மரங்கள் மரங்களாய் அறியப்படுவதில்லை என மரத்திற்கு தெரிவதில்லை. 0 பிறந்த குழந்தையை ஏந்தும் இன்னொரு குழந்தையின் வாஞ்சையுடன் இந்தக் கவிதையைச் சுமந்து திரிகிறேன். இறக்கிவிடும் இடம் நெருங்கும்போது பாரமாகிறது கைகள். 0 ஒரு கவிதைக்கு எப்படிக் கவனித்தாய் என்றான் நண்பொருவன் எப்படி யாரும் இதைக்கவனிப்பதில்லை என்பதுதான் எனது ஆச்சர்யம். 0 பாலைவனத்தைச் சுமக்கக் கொடுத்தீர்கள் பிறகு கடலையும் ஒரு சுடரை என்னிடம் அளித்தது உங்களுக்கு நினைவில் இல்லை மண்ணைக் கிளறிப்போடும் கோழியின் பாவனையில் அடுக்கினீர்கள் எதைஎதையோ. வைப்பதற்கு இடமில்லாத நேரத்தில் தான் இந்தக் கவிதையை அறிமுகம

எழுத்தின் சாரம்

எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள். பேனா மை கொட்டலாம். பேனா முனை உடையலாம். காகிதங்கள் கிழியலாம். எழுதியதைக் கிழித்து கைக் குழந்தை எறியலாம். எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள். நீங்கள் கணிப்பொறியில் எழுதுபவராக இருந்தால் தட்டச்சை தட்டிய போது எழுத்தெல்லாம் சதுரம் சதுரமாக வரலாம். வைரஸ் வந்து உங்கள் எழுத்துக்களைத் தின்று போகலாம். நினைவுத் தட்டின் வெட்டுக் காயங்களில் உங்களின் எழுத்து உடைபடலாம். அல்லது உங்கள் எழுத்துக்கு அங்கே இடமில்லாமலும் இருக்கலாம். ஆனாலும் எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள். அதில் எப்போதாவது அபூர்வமாய் ஒளிவட்டத்துடன் ஒரு நல்ல கவிதை வரலாம். அதன் விதையிலிருந்து ஒரு மரம் வளரலாம். அதன் பூவிலிருந்து ஒரு புதுக் கனி விளையலாம். அதைத் தின்ன ஒரு தேவதை வருவாள். அவள் இன்னொரு கவிதையை உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் மனதில் எழுதிவிட்டுச் செல்வாளாம். அந்த கவிதையை உரக்க நீங்கள் உச்சரிக்கையில் பல்லக்கில் ஏற்றி அவள் உலகமறியாத உன்னத பரிசொன்றைத் தருவாளாம். அதென்ன பரிசு? அதனை அறிவதற்கு எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள்

ரோகி

ரணத்தில் நிணம் கசிய வீதியில் நின்றிருந்தேன் பாதசாரிகளின் பார்வைகள் விநோதமாயிருந்தது தனக்கு வந்து விடுமோ என அஞ்சி விலகினர் சிலர் சிலர் அருவருப்புக் கொண்டு மண்ணில் காறி உமிழ்ந்தனர் புண்ணிலிருந்து வீசி்ய வாடையை காற்று வாங்கிச் சென்று இன்னொருவர் நாசிக்குள் நுழைத்தது உச்சி வெயிலால் காயங்கள் எரிந்தன உடலின் மேல் மற்றொரு உடல் போர்த்தியது போலிருந்தது உடலின் கனத்தால் பாரம் தாங்க இயலாத தோணி ஆடுவது போல உடம்பு அங்குமிங்கும் அசைந்தது மரணம் வந்து விடுதலை தரும் வரை வேறு கதிமோட்சம் இல்லையென்று உள்ளம் புலம்பி அழுதது.

ராணித் தேனீ

தேனீக்கள் பற்றிய புதியபாடம் நாளைக்கு ஆசிரியர் நடத்தும் முன் வாசித்துச் செல்லும் பழக்கம் செல்வராணிக்கு ‘குடும்பமாய் வாழும் தேனீக்கள்.. குடும்பத்தின் தலைவி ராணீத்தேனீ ‘ படத்தில் கம்பீரமாகத் தெரிந்தது ராணீத் தேனீ “எப்போடி வந்தே, சாப்பிட்டியா?” உழைத்த களைப்பைக் குரலில் காட்டாமல் கேட்டாள் வீட்டுக்குள் நுழைந்த அம்மா. ‘ராணியாக வளரவேண்டிய புழுவுக்கான அறை பிரத்தியேகமானது நிலக்கடலை வடிவில் அழகிய கிண்ணம் போன்றது’ “எந்திரிடி போயீ திண்ணயில உக்காந்து படி” உதைத்துத் துரத்தினார் போதையில் வந்த அப்பா. ‘ராஜாக்களின் வேலை உண்பது உறங்குவது இனம் பெருக உதவுவது.. இவற்றுக்குக் கொடுக்குகள் கிடையாது’ "அய்யோ விடு புள்ளை பரீச்சைக்கி கட்ட வச்சிருக்கம்யா” உள்ளே பாத்திரங்களின் உருளல் அம்மாவின் அலறல் “சம்பாதிக்க திமிராடி பொட்டக்குட்டி படிச்சு என்னாத்தக் கிழிக்கப் போவுது” அப்பாவின் உறுமல் மீண்டும் டாஸ்மாக் நோக்கி நகர்ந்தன அவர் கால்கள் ‘பஞ்சகாலத்தில் வெளியே தள்ளப் படுவார்கள் சோம்பேறி ராஜாக்கள்’ எத்தனை முறை வாசித்தாலும் இதுமட்டும் மனதில் ஏறாமல் கேட்கத் தொடங்கியிருந்தது அம்மாவின் கேவல் மேலே படிக்க இயலாத செல்வராணியின்
சந்திப்பு என்னை சந்திக்க வரும் நீங்கள் என்னைப் பற்றிய எந்த யூகத்திற்கும் செல்லாமல் நீங்கள் நீங்களாகவே வாருங்கள் நானும் நானாகவே வருகிறேன் உங்களைப் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல். பழைய காதலிகள் பழைய காதலிகளை பார்க்க நேர்கையில் நான் பழைய காதலனாக இருப்பதில்லை.

கோபுரம் தாங்கி

பழுத்த இலைகளை உதிர்த்துச் சென்றது காற்று நரகல் தின்னும் பன்றியின் மீது ஒன்றுக்கிருக்கும் சிறுவன் அடுக்களையில் பாத்திரத்தை உருட்டும் திருட்டுப் பூனை விசேஷ நாட்களில் காகங்களுக்கு ஏற்படும் கிராக்கி வண்ணத்துப்பூச்சி பறக்கும் பாதைகளில் உதிர்த்துச் செல்லும் வண்ணங்களை தங்கப் பரிதி யாரும் களவாட முடியாத உயரத்தில் வெள்ளி நிலவு ரசிக்க யாருமின்றி காய்கிறது திண்ணைகள் ஒட்டுக் கேட்கின்றன தெருவின் ரகசியங்களை கோபுரம் தாங்கிகள் கோபுரங்களை தாங்குவதில்லை.

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

01 கோலாகலம் சுற்றிவிடப்பட்ட தட்டு சுழன்று கொண்டிருந்தது ஒவ்வொரு முறையும் ஓரோர் மாதிரி. குழந்தைக் கண்களின் கோலாகலமோ ஒவ்வொரு முறைக்கும் ஒரே மாதிரி. O 02 கண்ணாமூச்சி அதற்குள்ளாகவா என்று அகல விரியும் விழிகளுக்கு இதற்குள்தான் என்று இதழ் விரியுமுன்னே எதற்குள் என்றபடி எட்டிப் போடும் கால்களுடன் இப்படித்தானே இருந்து கொண்டிருக்கிறோம் இரவைத் தொடும் கனவுடன் இளித்துக் கொண்டிருக்கும் பகல் மாதிரி.

ட்ரோஜனின் உரையாடலொன்று

இது என்ன விசித்திரமான தேசம் கைக் குழந்தைகள் தவிர்த்து ஆண் வாடையேதுமில்லை எல்லோருமே பெண்கள் வயதானவர்கள் நடுத்தர வயதுடையோர் யுவதிகள் எல்லோருமே பெண்கள் விழிகளில் வியப்பைத்தேக்கிய நண்ப பாழ்பட்டுச் சிதைந்து வெறுமையான இவ் விசித்திர நகரில் எஞ்சியுள்ள எல்லோருமே விதவைகள் எமக்கெனவிருந்த கணவர்களைத் தந்தையரைச் சகோதரரைப் புத்திரர்களை சீருடை அணிவித்து வீரப் பெயர்கள் சூட்டி மரியாதை வேட்டுக்களின் மத்தியில் புதைத்திட்டோம் செத்துப்போனவர்களாக மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)