Skip to main content

விட்டு விடுதலையாகி....


பரசுவிற்கு இன்று விடுதலை.சட்டம் வழங்கிய மூன்றுமாத தண்டனை இன்று பூர்த்தியாகிறது.

"நாளையிலிருந்து நீ சுதந்திரமனிதன்!" என்று நேற்று படுக்கப்போகும்போது ஆறுமுகம் பரசுவைப் பார்த்து சொன்னான்.

"ஜெயிலு விட்டு போனதும் எங்களை எல்லாம் மறந்துடுவே, இல்லியா பரசு?' வரதன் வேதனையுடன் அவன் விரலைப்பற்றியபடி கேட்டான்.

மூன்றே மாதத்தில் எல்லாருடைய மனத்திலும் இடம் பிடித்து விட்ட பரசு, சிறைக்குள் நுழைந்த முதல்நாள் நடுங்கித்தான் போனான். இருபத்துமூன்றுவயதில் சிறைவாசம்! படிப்பைமுடித்து வேலை பார்க்க வேண்டிய வயதில் சிறையில் கல்லுடைத்து, களிதின்று என்று நாட்களைக் கழிக்கும்படி விதியாகிவிட்டது. முதல்வாரம் முழுவதும்தூக்கமே வரவில்லை. ஆனால் நாளாவட்டத்தில் பக்கத்தில் இருந்த இதரகைதிகளின் அன்பான பார்வையில், பரிவான பேச்சில் சிறை வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கிகொண்டான். அவன் நினைத்தமாதிரி சிறையில் உள்ளவர்கள் எல்லாருமே கெட்டவர்களாய்த் தெரியவில்லை. அவர்களில் பலர் தனது பிரியமுள்ளவர்களுக்காக ஏங்கி சோகக் கதைகளைச் சொல்லி அழும்போது பரசு நெகிழ்ந்துதான் போனான் .

"பரசு !வெளியே போனதும் உன்கிட்ட எல்லாரும் நல்லா பழகி நெருங்குவாங்களா?"

"நெருங்கணும் வரதா! நாம கவசம் போட்டுக்காம உலகத்தோடப் பழகினா உலகமும் நம்ம கிட்ட உண்மையாப் பழகும் இல்லியா?":

"பரசு! உன் லட்சியம் கிராம முன்னேற்றம், அதற்குப் பாடுபடுவது இல்லையா? நல்லது,.அது வெற்றி பெறட்டும்! சீக்கிரமாய் ஒரு வேலைகிடைத்து நீ சந்தோஷமாய் வாழ என்மனமார்ந்த வாழ்த்துகள்!"
என்று தங்கராசு வாயார வாழ்த்தினார்

தங்கராசு, ரௌடிகள் ,தாதாக்கள் தொடங்கி சிறை அதிகாரிகள் அனைவருக்கும்யோகா கற்றுத்தரும் யோகா மாஸ்டர். அத்தனைபேருக்கும் அவரிடம் தனிமதிப்பும் மரியாதையும் உண்டு.அவர்தான் அடிக்கடி சொல்வார் ....

'சிறை வாழ்க்கைதான் ஒருமனிதனை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது? சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளியாகி இளம்வயதில் இங்கே நான் ஆயுள்கைதியாகவந்தேன் .வாழ்க்கையே அஸ்தமிச்சிப் போயிட்டதாய் முதலில் நினைச்சேன். இது நல்லது, இது கெட்டது, இவர் நல்லவர் அவர் கெட்டவர் என்று மனுஷன் போட்டுவரும்கணக்கெல்லாம் மாறிப்போகும். அனுபவம் மனுஷனை மாத்திடும்.ஜெயில்ல நல்லவனா வாழ்ந்துக் காட்டணும்னு எனக்குள்ள வைராக்கியம் வந்தது. ஆனா வாழவிடாமல் மனசுக்குள்ளிருந்து சாத்தான் தடுப்பான் .ஒருமனுஷனுக்கு எதிரி, வெளில யாருமில்ல. அவன் மனசுதான் பரம எதிரி . ஜல்லிக்கட்டு காளையாய் கைக்கு அடங்காமல் அங்குமிங்கும் தறி கெட்டு அலை பாயற மனசை அடக்கப் போனால் அதுவே ஆவேசமும் அகங்காரமுமாய் நம்மைப் புரட்டிஎடுக்கும். அதை அடக்கஆத்மபலம் வேணும்; மிருகமனத்தை அடக்க நாம் மனிதனாய் இருக்கணும்; அதுக்கு மனுஷத்தன்மை பெறணும்,



தங்கராசு நல்ல சிந்தைனையாளர் .அவரது அருகாமையில் பரசுவிற்கு சிறையே போதிமரமாயிற்று.


"ஒவ்வொருமனிதனும் மனதால் செயலால் சிறைப்பட்டிருக்கிறான். பாரதி சொல்வதுபோல,
'விடுதலையைப் பெறடா-நீ
விண்ணவர் நிலை பெறடா
கெடுதலை ஒன்றுமில்லை-உன்
கீழ்மைகள் உதறிடடா'
என்று வாழப் பழகிக் கொள்ள வேண்டும்" என்று தங்கராசு யோகக்கலைக்கு நடுவே வாழ்வியல் கலையையும் போதிப்பார்.

சிறையில் இருப்பவர்கள் ஏதோ சூழலில் குற்றம்புரிந்து உள்ளே இருக்கிறார்கள்; ஆனால் பலபேர் நிரபராதி எனும் போர்வையில் வெளியே திரிகிறார்கள் என்பது பரசுவின் சொந்த அனுபவத்திலேயே
அவனுக்குப் புரிந்து போயிற்று.

மூன்றுமாதம் முன்பு கிராமத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியை அவனால் மறக்கமுடியுமா என்ன?

அன்று ஊர்தோப்பில் ஆலமரத்தின்கீழே உட்கார்ந்து ஆசிரியர் வேலைக்கு மனுப்படிவத்தை பூர்த்தி செய்துகொண்டிருந்தான்பரசு. அங்கு மரத்தின் மேல் கீச்கீச் என்று நிறைய குருவிகள் கத்திக்கொண்டிருந்தன. ஏதோஒருகுருவிமட்டும் சோகமாய் தன்துணைதேடி கத்துவதுபோல பரசுவிற்குப்பட்டது.


அப்போதுதான் அருகாமையிலிருந்த வயல்பக்கம் உரத்தகுரலில் சிலர்விவாதம் செய்வது காதில் விழுந்தது. இடையிடையே தாழ்ந்தகுரல் ஒன்று கெஞ்சுவதுபோலக்கேட்கவும்'சித்தப்பா?' என்று அலறிக்கொண்டு ஓடினான்.

பரசுவின் சித்தப்பா குமரவேல் கிராமத்துப் பள்ளிக்கூட டீச்சர் .பொதுப்பணி, சமூகசேவைதான் அவருக்கு உயிர்மூச்சு. குடித்துக்குடித்து கடைசியில் வயிறுவெந்து இறந்துபோன தன் அப்பாவைவிடவும் அவரது தம்பியான குமரவேலின் மீது பரசுவிற்கு மதிப்புஅதிகம். ஐந்துவருடம் முன்பு விஷ சாராயம் குடித்து ஊரெல்லாம் கடனை வைத்துவிட்டு அவன் அப்பா போனதும் தன் குடும்பப் பொறுப்பை குமரவேல் ஏற்றார் என்பதால்மட்டுமல்ல ஒரேகுழந்தை ஆதிக்காக அவர் மறுமணமே செய்துகொள்ளாமல் கிராமத்தில் ஜாதி வித்தியாசம் பாராது அனனவருக்கும் எழுத்தறிவிப்பவர். மென்மையான இதயம் , தெளிவான பேச்சு , எல்லார்க்கும் உதவும் நல்லமனம் ...இவைகளின் மொத்தக்கலவைதான் தனது சித்தப்பா என்பது பரசுவின் எண்ணம்.

அவரைப்போய் ஒருவன் சீண்டிக்கொண்டிருந்தான். வயலுக்கு யார் முதலில் நீர்விடுவது என்று இரு தரப்பிலும் ஆரம்பித்த பேச்சு பிறகு வாக்குவாதமாகியது .குமரவேல் நியாயத்தின்பக்கம் நின்றார். தர்மமாய்ப் போக வேண்டும் என்றார்.அவ்வளவுதான் அதர்ம அணித்தலைவனுக்கு ஆவேசம் வந்துவிட்டது.

" மாரி!எடுடா அரிவாள?" என்று ஆணையிட்டான். காத்திருந்த அவன் ஆள் ஒருவன், அரிவாளால் குமரவேலை சகட்டுமேனிக்குத் தாக்கினான்.தலைமுகட்டில் ரத்தத்துளி முதலில் தயங்கிப் பிறகு'குபுக்' என பொங்கிக் கொண்டு வரவும் குமரவேல் தலையைத் தாங்கியபடியே நிலத்தில் சரிந்தார்.

"டேய் மாரீ! என்னடா நீ? இவனப்போயி வெட்டிப் போட்டியா அறிவுகெட்டவனே ?என் பங்காளி தலைய சீவுன்னு சொன்னேன்... அவன் தான் தண்ணீ தன் வயலுக்கு முதல்ல விடச் சொல்லி மல்லு கட்டினான்...அவன் இப்போ கலவரம் பாத்து பயந்து ஓடிட்டான்போல.?. எப்டியோ சரிதான்... தர்மம் நியாயம் பேசினவனுக்கே இப்டீன்னா நம்ம கதி என்னான்னு பங்காளிய யோசிக்கவைக்க நீ சேஞ்சதும் சர்தான்" என்று ஆணையிட்டவன் கெக்கலிக்கவும் பரசு எரிச்சலுடன்,"அடப்பாவி?" என்று வீறிட்டான்

ரத்தவெள்ளத்தில்குற்றுயிராய் கிடக்கும் தன் சித்தப்பாவை கண் கலங்கப் பார்த்தபடியே அரிவாளை வீசினவனின் சட்டையைப்பிடித்தான்.ஆத்திரமாய் குரல்கொடுத்தான். "ட்ட்ட்டேய்..கொலைகாரப்பாவி ஒருநல்ல மனுஷனை தீர்த்துக் கட்டிட்டியேடா? இனி வயலில் தண்ணிபாயுமாடா? அவர் ரத்தம்தான் இப்போவே ஓடுதுடா" என்று உரக்கக் கத்தினான். உடனே மாரி மன்னிப்பு கேட்பதுபோல் தன் இரு கரத்தை கூப்பியபடியே பின்னோக்கி நடக்க, அங்கிருந்த ஒருவன் அவனுக்கு ஏதோ சைகை காட்ட உடனே அவன் அங்கிருந்த பெரிய கல்தடுக்கி அருகிலிருந்த பாறையில் தலையை மோதிக் கொண்டதை பரசு கவனித்தான். இதுதான் நடந்தது


ஆனால்அந்த சதிக்கூட்டம்செய்தசூழ்ச்சியில் ,சட்டம் பரசுவை பிடித்துக்கொண்டது.பங்காளிச்சண்டையை பார்வையிட வந்த குமரவேலை யாரோ அவரிடம் தமக்கு இருந்த வேறு பகை காரணமாய் கொலை செய்துவிட்டதாயும் பரசு அதை நம்பாமல் மாரிதான்கொலை செய்தான் என்றுஅவனை பாறை மீது தள்ளி கொலை செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியது.

போலீஸ், கோர்ட், விசாரணை நடந்து, "குற்றம் ருசுவானதால் மூன்றுமாதம் சிறை தண்டனைவழங்குகிறேன்" என்று நீதிபதியை சொல்ல வைத்தது.

சித்தப்பாவின் பத்துவயதுமகன் ஆதி ஜெயிலுக்கு பரசுவைப் பார்க்க வரும்போதெல்லாம் சொல்வான். "பரசுண்னே அந்தாள் மாரிக்கு பெரிய அடி ஒண்ணுமில்ல. ஆஸ்பித்திரிலிருந்து வந்திட்டான்.நல்லாத்தான் இருக்கான் ...சூழ்ச்சி செஞ்சி உங்கள மாட்டிவிட்டுட்டாங்க... இதுல பெரியம்மா -அதான் உங்கம்மா- படுத்தபடுக்கைஆயிட்டாங்க ....மீனாக்கா அழுதுட்டே இருக்குது...எங்கப்பாவும் இல்ல..வழக்கம்போல குடும்பத்துக்கு ஆறுதல்சொல்லிக் காப்பாத்த.."

"வருத்தப்படாதே ஆதி! உப்புதின்னவன் தண்ணிகுடிச்சிதான் தீரணும்..நான் வரவரைக்கும் வீட்டை நீ கவனிச்சிக்கோ..நான் வந்ததும் சித்தப்பா இடத்துல இருந்து உன்னையும் என் அம்மா தங்கச்சியையும் கவனிச்சிக்கறேன் என்ன? "


என்னவோ பதினைந்துநாளாய் ஆதியும் ஜெயில்பக்கம்வரவேஇல்லை .

சிறை சம்பிரதாயங்களைமுடித்துக்கொண்டு ஜெயிலரின் அறையை விட்டு நகர்ந்தான். வாசலில் பெரிய இரும்புக்கேட்டின் வயிற்றுப்பகுதியில் சின்னதாயிருந்த கதவின் வழியே குனிந்து வெளியேவந்தான் கதவின் அருகே துப்பாக்கியை நிமிர்த்திவைத்துக்கொண்டு வீச்சரிவாள் மீசையுடன் நின்ற காவலாளியிடம் "போய்வரேன்" என்றுசொல்லி கைகுவித்தான்

"வராதே, திரும்பி இங்க வரவேவராதே. ஜெயில்லயும்,சாவுவீட்லயும்'போயிட்டுவரேன்'என்கிறவார்த்தை வரவேகூடாது'என்று அதட்டலாய் சொல்லி சிரித்தான் அவன் .தொடர்ந்து "வெளிலபோயி ஒழுங்கா இரு" என்றான் .


'நான் ஒழுங்காய்தான் இருந்தேன் ஆனால் யாரும் என்னை நம்பவில்லையே?நீதிபதியே நம்பாததால்தான் சிறைதண்டனை கிடைத்தது '.பரசு மனசுக்குள் புலம்பிக் கொண்டான்.


இந்தமூன்றுமாதத்தில் அம்மா எப்படி இருக்கிறாளோ? படுத்தபடுக்கைன்னு ஆதி சொல்லிட்டே இருத்தான். தங்கச்சிமீனா டவுன்போயி நாலு பசங்களுக்கு ட்யூஷன் எடுக்குதாம் பாவம்.
வேராய்குடும்பத்தைத் தாங்கிட்டு இருந்த சித்தப்பா திடீர்னு மறைந்ததுல விழுதுகள் எல்லாம் ஆட்டம் கண்டிடிச்சி. ஊருக்குப்போனதும் அம்மா, மீனா ,,ஆதி சுப்ரமணிவாத்தியார். எல்லாரையும்பார்க்கணும் .
.
மனசுக்குள் ஏதேதோ நினைத்தபடி பரசு பஸ்ஸைவிட்டு கீழே இறங்கினான்.

பட்டியலில் கடைசியாய் நின்றவர் பஸ்ஸை விட்டு இறங்கியதுமே முதலில் எதிரில் வந்து நின்றார்

"பரசு? "

குரல் கேட்டு விழி உயர்த்தி அவரைப்பார்த்தான்பரசு. ஆறடி உயரத்தில் நல்ல பருமனும் தக்காளீ நிறமுமாய் இருந்தவர் கருத்து உடல் இளைத்துக்குறுகிப்போயிருந்தார்.

திடுக்கிட்ட பரசு,

"வாத்தியாரய்யா! உங்க நண்பர்- என் சித்தப்பா- போனதுல நீங்க இப்படி உருக்குலைஞ்சி போயிட்டீங்களே ஐயா? " எண்று நா தழுதழுத்தான் .

"ஆமாப்பா..நல்லவங்களுக்கு இதுகாலமில்ல.. நல்லதுக்கும் காலமில்ல. குமரவேல் போன நேரம் நான் ஊரில் இல்லாமல் என் மகளோட வடக்கே கோயில் யாத்திரை போயிருப்பேனா? அவன் முகத்தைக்கூட கடசில பார்க்காத பாவி நான். எளியாரை வலியார் அடிச்சா, வலியாரை தெய்வம் அடிக்கும் தம்பி! ஆமா நீங்க இன்னிக்குத்தான் விடுதலை ஆகிவரிங்களா என்ன?"

"ஊருக்குள் வரவே வெக்கமா இருக்குது வாத்தியரய்யா ...தப்பு செய்யாமல் சந்தர்ப்ப சூழ்நிலைல ஜெயிலுக்கு போன என்னை ஊர்ல எல்லாரும் ஏத்துக்குவாங்களா? இவந்தான் அன்னிக்கு போலீஸ்காரங்க பக்கத்துல வர, தலையக்குனிஞ்சிட்டு வேனில் ஏறின பரசு?"ன்னு தான் என்னை நினனவுபடுத்திப்பாங்க இல்லீங்களா?"

"அதைவிடுங்க தம்பி...'உலகின் வாயைத் தைப்பது கடினம்; உந்தன்செவிகளை மூடுதல் சுலபம்.'.வைரமுத்து வரிகளை ஞாபகம் வச்சிக்குங்க... அதுசரி..பரசு! உங்க அம்மாவும் தங்கச்சியும் டவுனுக்கு வீடுகுடி போயிட்டாங்க தெரியுமா?"

"அப்படியா? ஆதி வாரம் ஒருவாட்டி என்னைப் பார்க்க வருவான் எல்லாம் சொல்லுவான் என்னவோ ரண்டு வாரமா அவன் வரல ..அதான் விஷயம் தெரியல. .ஐயா! டவுன்ல அம்மாவீட்டு அட்ரஸ் சொல்றீங்களா?"

அவரிடம் முகவரி வாங்கிக்கொண்டு டவுனுக்கு பஸ் ஏறினான்.



வீட்டிற்குள் நுழைந்ததும் ஆர்வமாய்." அம்மா!" என்றவனை,"எங்கவந்தே?" என்பதுபோல அவன் அம்மாபார்வதி பார்த்தாள்.

பிறகு, "ஏண்டா பெரியதலைங்க சண்டை போடற இடத்துல உனக்கென்ன வேலல? உங்கசித்தப்பனுக்கும் அறிவுஇல்லை, நியாயம் ,நேர்மை தர்மம்னு கடைசில உயிரை பலி கொடுத்துப் போய்ச் சேர்ந்தாரு...நீ செஞ்ச காரியத்துல எங்களுக்கு எத்தினி அவமானம்? உன் தங்கச்சிக்குக் கல்யாணம் ஆகவேணாமா? நாங்க டவுனு வந்ததே அவளுக்கு வரன் திகயணும்னுதான் இங்கயும் வந்து அதைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிடாதே..கண் காணாம எங்கனாச்சும் போயிடு ஆமா?"

"அம்மா! நான் தப்புசெய்யல...ஆனா சித்தப்பாவையே புரிஞ்சிக்காம அவரை விமர்சனம் செய்யும் உங்ககிட்ட நான் எப்படி என்னை நிரூபிச்சி காட்டுறது?"

"அண்ணே!"

குரல் கொடுத்தபடி உள்ளீருந்து வந்த மீனாவிடம், "மீனா1 நீ பத்து க்ளாஸ் படிச்சவ நீ சொல்லும்மா நம்ம அம்மாவுக்கு ?"என்றான் தவிப்பான குரலில்.

"அம்மா சொல்றதுல தப்பு இல்ல..ஆளு படை வச்சிருக்கிறவங்ககிட்ட நீ ஏன் மோதணும் அண்ணே?"

'அப்போ அநியாயம் நடந்தா பாத்துகிட்டு சும்மா நிக்கணுமா?" சிவ்வென்று கோபம் தலைக்கேற வெடித்தான் பரசு.

'அதெல்லாம் எனக்கு தெரியாது .நான் இப்போ நாலு பசங்களுக்கு ட்யூஷன் எடுக்கணூம்..அதுல
வர்ர காசுலதான் குடித்தனம் செய்யறோம்...அந்த ஆதிப்பய வேற ஆஸ்பித்திரிசெலவு அம்பது ரூபா வச்சிட்டான்.."


"ஐயோ என்னாச்சு ஆதிக்கு?"

'ஆமாடா...அந்த தண்டச்சோறுக்கு காலராவாம்..நீ கிளம்புடி மீனா. வெட்டிக்கு இங்க பேசி நிக்கவேணாம் " என்றாள் பார்வதி கடுப்புடன்.


குடையைவிரித்தபடி சாலையிலிறங்கிய தங்கையை ஆற்றாமையாய்பார்த்தான் பரசு .

குடையைவிரிக்குமுன் உன் மனசைவிரிக்கப் பழக்கிக்கொள் பெண்ணே...

"அம்மா, ஆதி எந்த ஆஸ்பித்த்ரில இருக்கான் ?"

"தர்மாஸ்பித்ரிதான்னு நினைக்கறேன் யாருகண்டா?".
.
"என்னம்மா இப்படி அலட்சியமா சொல்றீங்க? பத்துவயசுப்பையன்மாஆதி... பாவம் '

"உன்னைப்பாக்க ஜெயிலுக்கு போவாதடான்னா என்னைமீறிப்போன நாயி "

"அம்மா...?"

வார்த்தைகளை தடித்து வீச இருந்த பரசு, சட்டென தங்கராசுவின் முகம் நினைவிற்குவரவும் அடக்கிக் கொண்டான்.

பரசு வேதனையுடன் வீட்டைவிட்டு வெளியேறி ஆஸ்பித்திரிக்கு வந்து ஆதியை பார்த்தான்.

.இளைத்துத் துரும்பாய் கிடந்தவன் இவனைக்கண்டதும்," பரசண்ணே1 வந்துட்டிங்களா? சந்தோஷமா இருக்குது. உங்க நினவுல பெரியம்மாவும் மீனாக்காவும் வாடிப் போயிடாங்க...எப்பவும் உங்களையே நினைச்சிட்டே இருக்காங்க" என்றான் ஜெயிலுக்குப் பார்க்க வரும் போது சொல்வதுபோல.

"போதும்ப்பா... பொய் சொன்னதெல்லாம் போதும்...இப்போநான் எல்லாரையும் புரிஞ்சிட்டேன் உடம்பு மோசமாயிருக்கிறேயேப்பா ஆதி...பட்டினி கிடந்தியாப்பா பலநாளூ?"

'இல்லியே பெரியம்மா வடை பாயாசத்தோட சாப்பாடு போடுவாங்களே?" என்று அப்பாவுக்குப்பிள்ளை தப்பாமல் வெகுளியாய் புன்னகைத்தபடி சொன்னான்.

பரசு கலங்கிய கண்களுடன் அந்த ஆஸ்பித்திரியின் டாக்டரிடம் போய் விவரம் கேட்டான். அவர் நோய் மிகவும் முற்றிப்போனபிறகு வந்து சேர்ந்ததால் ஆதிக்கு உயிர் பிழைக்கும் சாத்தியக்கூறுகள் குறைவென தெரிவித்தார் .பரசு தான் நிலை குலைந்து கீழே விழாமலிருக்கவேண்டுமே என நினைத்தபடி மறுபடி பஸ் ஏறி கிராமத்து தோப்பிற்குள் சென்று ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டான். மனசில் பாறாங்கல்லை கட்டிவைத்தமாதிரி நெஞ்சு கனத்தது.


'ஆதி உடம்பு தேறிபிழைச்சி வரணும்' என்று வாய் முணுமுணுத்தது.


வழக்கம் போல மரத்தின் மேலே குருவிகள் 'கீச்கிச்ச் என்று கத்தின

நீண்ட நேரம் அப்படியே அமர்ந்தவனை"பரசு!" என்ற இனியமென்மையான குரல் நிமிர வைத்தது .

பத்மா!

சுப்ரமணிசாரின் மகள்! கிராமத்துப்பள்ளியில் பத்தாவது வரை ஒன்றாய் படித்தவள்.

"நலமா பத்மா?"

"பரசு, அப்பா சொன்னாரு நீ ஜெயிலிருந்து விடுதலை ஆகி இன்னிக்கு வந்திட்டேன்னு.... எப்படியும் இங்கே ஆலமரத்தடிக்கு நீ வருவேன்னு எனக்குத் தெரியும்..நானும் இங்க தினமும் வந்து ஆலமரத்துக் குருவிகள்கிட்ட உன்னைப் பத்தி விசாரிச்சிட்டுதான் இருப்பேன் ."'பத்மா நிறுத்திவிட்டு அவனையே ஆழமாய்ப் பார்த்தாள் .

பரசு விழித்தான்.

பத்மா தொடர்ந்தாள். "நினைவிருக்கா பரசு? ஊர்க்குழாயில தண்ணீர் எடுக்க சண்டைவந்தபோது பல எதிர்ப்புகளுக்கு இடையில நீதானே டோக்கன் முறை வச்சி வரிசைல நின்னு எடுத்திட்டுப் போகணும்னு கட்டுப்பாடு கொண்டுவந்தே? உன் சித்தப்பாவுடன் சேர்ந்து கிராம முன்னேற்றத்துக்கு ஏதும் செய்யணும்னு நீ சொல்லிட்டே இருப்பேன்னு அப்பா அடிக்கடி பெருமையா சொல்வார்..அதனாலேயே உன்னை என்மனசில ஏத்துகிட்டேன். "

"பத்மா! என்ன சொல்றே/ உன் மனசில நான் இருக்கேனா, நிஜமாவா?"

"ஆமாம் பரசு! பொண்ணுங்க சட்டுனு மனசில இருக்கிறதை வெளியே சொல்லமாட்டோம் ஆனா, கண்ணு காமிச்சிக் கொடுத்திடும்....' விழிகளின் ஒளியில் கண்டு கொள் காதலை , வார்த்தைகள் அர்த்தமற்றவை...' நான் எழுதின கவிதைதான், நல்லாருக்கா ?"


"அழகு, கவிதையும், அதை எழுதுன நீயும்தான்! சந்தோஷமாயிருக்கு பத்மா! இந்த ஆலமரத்துல அம்பது நூறு குருவிகள் கீச் கீச் னு கத்தறப்போ ஒரு குருவி மட்டும் எனக்காக கத்துதுன்னு நினைச்சிக்குவேன். இப்போ அது நிஜமாயிடிச்சி. ! ஆனா ,பத்மா, உலகத்தின் பார்வையில் நான் சிறுத்துப் போயிருக்கேனே?"

"ஆலம்விதை சின்னதுதான் அதுதான் பெரியவிருட்சத்துக்கே ஆதாரம் பரசு? "

" இனி என்னால் என்ன சாதிக்கமுடியும் பத்மா? "

'வாழ்க்கையே ஒரு சாதனைதான்.. மெல்லமெல்ல ஆமை முன்னேறுகிற சாதனை ! உனக்கு நான் துணையா வரேன் பரசு"

" என் எதிர்காலத்துக்காக இப்போ நான் உன்கூட சேர்ந்துகொள்வது சுயநலமில்லையா? "

'சுயநலமாவது தியாகமாவது ? அப்படி எதுவுமே இல்லை.நிறைந்தமனதுடன் செய்யப்படும் காரியம் எதுவும் நம்மீது ஒட்டிகொள்வதில்லைன்னு உன் சித்தப்பா தான் அடிக்கடி சொல்வார். '

"ஆனாலும் எனக்கு பயமாயிருக்கு பத்மா. என்லட்சியப்பயணம் வெற்றியடையும் என்கிற நம்பிக்கையே போய்விட்டது. பெத்த தாயே என்னை இன்னமும் கெட்டவனாய்ப் பாக்கறாங்க..இங்கே யாரையும் திருத்தவே முடியாதுபோலிருக்கு?"

"பரசு! கடவுளின் படைப்பில் கோளாறே கிடையாது .பிழை இருப்பதாகத்தோன்றுவதெல்லாம் நமது எண்ணங்களின் நிழலாட்டமே இல்லாது வேறில்லை . நமது எண்ணப்படி இந்த உலகத்தை திருத்தி மாற்றியமைக்க முயல்வது பேதமை. உலகம் எப்படி இருக்கிறதோ அப்படி ஏற்று, நமது இயக்கம் அதில் பொருந்துகிறமாதிரி செய்துகொள்வது அறிவு. 'மனம் வேண்டியபடி செல்லும் உடலும் நசையறுமனமும் வேண்டு'மென பாரதி வரமாய்கேட்டது கவலை அச்சம் இவற்றை அடிமை கொள்ளும் பொருட்டாகத்தானே? காயிலே புளிப்பதெல்லாம் கனியிலே இனிக்காமல் போகாது..எல்லாத்துக்கும் காத்திருக்கணும்..சரி,நேரமாகிறது, எழுந்திரு பரசு!"

பத்மா நின்றபடிக்குனிந்து அவனை நோக்கி தனது வலது கரத்தை நீட்டினாள்.

பேச்சைவிட மௌனம் வலியது; ஒருநூறுவார்த்தைகளை பார்வை சொல்லிவிடும், ஓராயிரம் விஷயங்களை சின்ன ஸ்பரிசம் தெரிவித்துவிடும்.

பரசு மௌனமாய் பத்மாவின் கரத்தை தன்கரத்தினால் அழுந்தப் பற்றியபடி எழுந்துகொண்டான்.
அடைபட்டிருந்த காற்று மனக்கூண்டிலிருந்து விடுதலையாகி சுவாசமாய் வெளியே வர ஆரம்பித்தது.

Comments