Skip to main content

ழ 5வது இதழ் - டிசம்பர் 1978 ஜனவரி 1979



மீர்ஸா காலிப் முஹம்மது இக்பால் ஒரு அறிமுகம்

 உலகப் புகழ் பெற்ற உருதுக் கவிஞர்களான மீர்ஸா காலீப் முஹம்மது இக்பால் இவர்களின் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஸ்டர்லிங் பப்ளிஷர்ஸ், டெல்லி வெளியிட்டிருக்கிறார்கள்.  உருதுக் கவிதைகளைப் பற்றி ஒரு ஆச்சரியமான விஷயம்,  

 கல்வியறிவு உள்ளவரும் அற்றவரும் அவற்றை ஒருங்கே புகழ்கின்ற தன்மை உருதுக் கவிதைகளின் இசை வடிவமும், அக்கவிதைகள் மனித
வாழ்க்கையோடு தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்வதும் இதற்கு ஒரளவு காரணம் எனலாம். இக்பாலும், காலிப்பும் பிரிவடையா இந்தியா தந்த பொக்கிஷங்கள்.  காலிப் இறந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர் இக்பால்.  காலிப்பின் கவித்துவத்தினால் பெரிதும் கவரப் பட்டவர். 


காலிப்பை கோதேயுடன் ஒப்பிட்டால் இக்பாலை காலெரிட்ஜுடன் ஒப்பிடலாம்.  இந்த ஒப்புமை முழுவதும் பொருந்தாது.  காலிப் பின் கவிதைகள் உணர்ச்சி வயப்பட்டு வெளி வந்தவை.  பேரானந்தத்தினின்று  வெளி வந்தவை.  இக்பாலின் கவிதைகள் தத்துவ பூர்வமானவை.  மக்களை விழிப்படையச் செய்தவை.


 காலிப்பின் கவிதைகள் பெரும்பாலும் கஸல்களாய் வெளிவந்தவை.  அராபிய மொழியில் கஸல் என்பது தனது பிரியத்துக்குரியவளிடம்,  உரியவன் பேசும் காதல் மொழி.  பிரிவைத் தாங்காது காதலன் அரற்றும் மொழி.  உறவை எதிர் நோக்கியிருக்கும் அன்புமொழி.  ஆனால் இக்பாலின் கவிதைகள் நஸாம் எனப்படுபவை.  இவை வேறுபட்டவை.  நாட்டுப் பற்றை, இஸ்லாமியப் புனருத்தாரணத்தை வலியுறுத்தியவை.

காலிப்பின் சில வரிகள்

 
 ''என்னுடைய இதயத்தின் துளைகளை
 ஒன்று சேர்த்து வைக்கிறேன்-
 அவளுடைய கண்கள் மறுபடியும்
 அதைத் துளைக்கட்டும்''
 ''இப்போது ரத்தக்கண்ணீர் சொரிவது கடினம்
 இதயத்தில் ரத்தம் வரச்  சக்தியில்லை''

 ''காதலின் வலிக்கோ மருந்தில்லை
 அற்பமான இதயமே-மறுபடியும்
 காதல்வலி கொள்கிறாயே''
 ''நீ இல்லாமல் ஒரு பொருளும் இருக்கமுடியாது
 அவ்வாறிருக்க-கடவுளே ஏனிந்த ஆரவாரம்''

 ''உலோபியான மண்ணைப் பார்த்து
 கேட்கிறேன் நான்-அதனுள்
 புதைத்த அழகுகளை அது
 என்ன செய்தது?''

 ''சூரிய உதயத்தில் பனித்துளி இறக்கக் கற்கிறது.
 அவள் பார்க்கின்ற வரை நானும் உயிருடன் இருப்பேன்.''
 ''நெடுஞ்சாலை வழிக் கள்ளர்களைப் போலவே
 என் மனதைக் கொள்ளை கொண்டு சென்று விட்டாளே,''

 ''இறப்பு நிச்சயம்-கண்டிப்பாய் வரும்
 ஆனால் அவளோ நான் விரும்பினும் வாராள்''

 ''ஒரு லட்சம் நம்பிக்கைகள் எனது மெளனத்தில்
 புதைந்து கிடக்கின்றன. நான்
 ஏழை யொருவனின் கல்லறையின்
 எரிந்த விளக்கு.''

 ''ஓ! காலிப்! இப்போது போய் ஒரு நிலத்தில் வாழு
 அந்த நிலத்தில் உனது அந்தரங்கத்தையும்
 பாட்டினையும் பகிர்ந்து கொள்பவர் இருக்கக்கூடாது
 அங்கொரு வீட்டினைக் கட்டு கதவுகளும்
 சுவர்களும் இருக்கக் கூடாது.
 அந்த வீட்டிற்குக் காப்பாளர், பக்கத்து
 வீட்டுக்காரர் இருக்கக் கூடாது
 நீ உடல் நலம் குன்றினால் உன்னைக் கவனிப்பார்
 இருக்கக் கூடாது.  நீ உயிரை விட்டால் துக்கம்
 அனுஷ்டிப்பவர் இருக்கக் கூடாது.''


இக்பாலின் சில வரிகள்

 ''ஓ அந்தணனே-நான் ஒன்று சொல்லட்டுமா?
 நீ வருந்தாமல் இரு-அது ஒரு உண்மை
 உன்னுடைய ஆலயங்களின் சாமிகள்
 எல்லாம் மிகவும் பழையன
 அவை உனக்கு வெறுப்பைப் போதித்தன
 உனக்குச் சொந்தமானவற்றை
 சொந்தமில்லை என்றன
 சண்டையிடு அல்லல்படு என்பவை
 கடவுளின் விருப்பம்-அறிவுக்குத்
 தெரிந்த உண்மை
 உன் அறிவு வார்த்தைகளால் நான் களைத்து
 வேதங்களையும் கோயில்களையும் விட்டு விடுகிறேன்
 எனக்குக் கற்கள் மட்டுமல்ல
 என்னுடைய நாட்டின் அற்பமான தூசியும் புனிதமானது''.

 ''கடலின் அருகே நின்றேன்
 ஓயாதடிக்கின்ற அலைகளைக் கேட்டேன்
 நீ எதற்கு அடிமை?
 ஆயிரக்கணக்கான கீழ்த்திசை முத்துகளுடன்
 உன்னுடைய ஓரங்கள் பளபளக்கின்றனவே!
 என்னுடைய இதயத்தைப் போன்ற
 மாணிக்கம் ஒன்று உன்னிடம் உள்ளதா?
 கடல் கரையிலிருந்து வெட்கப்பட்டு ஓடியது
 பேசவில்லை.''

 ''நான் விடைபெறும் போது
 எல்லோரும் கூறுவர்
 அவனை அறிந்தேன்-அவனை அறிந்தேன்
 எனினும் ஒருவரும் அறியவில்லை-
 எப்போது நான் வந்தேன்?
 என்ன நான் சொன்னேன்?
 யாருக்கு நான் சொன்னேன்?''

                                                                                                     திவ்யா.

Comments