Skip to main content

Posts

Showing posts from March, 2012

சொற்களை இழுத்துப் போகும் எறும்புகள்..

*  ஜன்னல் திரை விலகிய நுண்ணிய கணத்தில் கொஞ்சமாய் இந்த அறையினுள் நுழைந்துவிட்ட வானத்தை என்ன செய்ய சார்த்தி வைத்திருக்கும் வாசல் கதவின் கீழ் இடுக்கு வழியே எனது வார்த்தைகளைத் துண்டு துண்டுகளாக இழுத்துப் போகும் அந்த எறும்புகளை எப்படி அதட்ட பிளாட்பாரத்தில் வளர்ந்திருக்கும் கார்ப்பரேஷன் மரத்தின் அடர்த்திக் கிளையிலிருந்து சதா எதையாவது சொல்லித் திட்டிக் கொண்டிருக்கும் அணில்களை எப்படி புரிய வைக்க உங்கள் ஜன்னலுக்குள் அத்துமீறி நுழைந்துவிட்டவன் நானென்று ******

மராத்திய மொழியில் ஹைக்கூ கவிதைகள் - ஓர் அறிமுகம்*

மராத்தியம் என்றவுடன் நினைவிற்கு வருவது சிவாஜியும் தஞ்சாவூர் பக்கம் (இப்போது எங்கும்) வாழும் மராத்தி பேசும் தமிழ் நண்பர்களுமே. பம்பாய் செல்லும் வரை எனக்கும் அப்படியே. 2008-இல் பெங்களூரில் ஒரு அகில உலக ஹைக்கூ திருவிழா (சம்மேளனம் போன்ற ஒன்று ) இருந்த போது அதற்காக மராத்திய மொழியில் ஹைக்கூ என்பது பற்றி பேச ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஏகமனதாக மராத்திய நண்பர்களால் எனக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஷிரிஷ் பை. மிகவும் வயதுமுதிர்ந்த அம்மையார் தன்னுடைய வயதின் காரணமாக வர முடியாதென்று பூஜாவை அறிமுகம் செய்தார். மராத்திய மொழி பேசும் மக்கள் ஒன்பது கோடிக்கும் மேல் என்பதும் 1300 வருஷங்களுக்கும் மேற்பட்ட பழமை உடையது என்பதும் சிலர் அறிந்ததே.    மராத்திய மொழியில் நான்கு வரி கவிதைகள் உண்டு- அவை சரொளி, கனிகா. வத்ரடிகா மற்றும் பல.  ஹைக்கூ என்பது இவற்றில் ஒன்றாக இல்லாமல் தனி வடிவமாகவே பேசப்படுகிறது. சில முக்கியமான வித்தியாசங்களை மராத்திய ஹைக்கூ உலகில் வெகு சுலபமாக யாராலும் கண்டுவிட முடியும். 5-7-5 என்ற சிலபள் முறை இங்கு காணப்படுவதில்லை. இந்தி ஹைக்கூ எழுத்தாளர்களிடையே இந்த வரிசை முறை பெரும்பாலும் காணப்படுகிற

புத்தனாவது சுலபமல்ல

முன் முடிவுகளெல்லாம் குப்பையென மண்டிக் கிடக்கும் மனக்குடுவையை சுத்தப்படுத்து முதலில் அப்புறம் சுத்தப்படுத்தலாம் புத்தன் முகத்தை! உலகெனும் பெருங்கோப்பையில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கிறது யுக காலம். விருப்பத்தேர்வு உன்னிடமே விடப்பட்டுள்ளது,   அதன் ஒரு சிறு கண நேரம் அல்லது ஒரு முழுயுகம் எடுத்துக்கொள்ளலாம் நீ. கல் புத்தன்   கடவுள் புத்தனாக ஒரு ஒருத்தருக்கும் ஒவ்வொரு அவகாசம் சுயமாய் தீர்மானிக்கப்படட்டும்.                                
ழ 6வது இதழ் பிப்ரவரி / மே 1979  நான்கு கவிதைகள் 1.  அணுவுக்கு எதிராய்  மக்கள் கிளர்ச்சி  அணு உலையிலிருந்து  சிதறி விட்டது  அணுத்துகள் ஒன்று  கலவர மக்கள்  கூக்குரலிடுகின்றனர்  வானிலிருந்தும் நீரிலிருந்தும்  வினோத வாகனங்களைக்கொண்டு  ஆராய்கின்றனர்  சுற்றுப்புறத்திலிருந்து  வெளியேற வேண்டும்  உள் உலகிலிருந்து வெளி உலகிற்குத்  தப்பிக்க வேண்டும்  மீண்டும் மனிதம் அடிமையாயிற்று  அதன் கண்டுபிடிப்பிற்கு. 2.  எனக்குள் என்னில் என்னாய் விரிந்து  உள் அழிழ்ந்தேன்  கற்பனை நிஜம்  காலம் ஒளி  ஒலி பயணம்  உருவம் உள்ளடக்கம்  எல்லா இடங்களிலும் தேடினேன்  தெரிந்தும் தெரியாமல்  விரிந்தும் விரியாமல்  இருந்தும் இல்லாமல்  ஆன் ஏன் 3.  அற்புதமாய்ப் புலர்ந்த காலை  நீள நிழல்கள்  நிலத்தில் கோலமிட  வண்ணக்கலவையாய் உலகம்  எங்கும் விரிந்து  கெட்டியாய்த் தரை  என் காலடியில்  நிஜம் புதைந்து கிடக்க 4.  ஒரு தலைப்பிடாத கவிதையாய்  வாழ்க்கை  ஒரு நாள் இரண்டு நாள் என  தொடர்ந்த நாட்களை எண்ணினேன்  காலையைத் தொடர்ந்து மாலை  இரவாகும் காலப்புணர்ச்சியில்  பிரமித்து நின்றேன்

இரண்டு கவிதைகள்

1 சற்றைக்கு முன்  ஜன்னல் சட்டமிட்ட வானில்  பறந்து கொண்டிருந்த  பறவை  எங்கே?  அது  சற்றைக்கு முன்  பறந்து கொண்  டிருக்கிறது. 2 பறந்து செல்லும்  பறவையை  நிறுத்திக் கேட்டான்:  பறப்பதெப்படி?  அமர்ந்திருக்கையில்  சொல்லத் தெரியாது கூடப்  பறந்து வா  சொல்கிறேன் என்றது.  கூடப்  பறந்து கேட்டான்:  எப்படி?  சிரித்து உன்போலத்தான்  என்றது.  அட ஆமாம்  ஆனால் எப்படி  எனக் கீழே கிடந்தான்  பறவை  மேலே பறந்து  சென்றது.  

கூப்பாடு

என்னைச் சொல்லி  ஆவது ஒன்றும் இல்லை- நானாக உன்னைக் கூப்பிட வில்லை நீயாக வந்தாய் எட்டிப் பார்த்தாய்  பிரதி பிம்பம் கண்டாய்  பின் சென்று  காணவில்லை என்று  கூப்பாடு போடுகிறாய்  அடம் பிடிக்கும் சண்டிச் சிறுமியாய்! உன் பிம்பம் காட்டுதல்  நான் வேண்டி விரும்பிச் செய்யவில்லை அதுபோலவே  காட்டக்கூடாது என்றும் நான் ஆசைப் பட்டுச் செய்யவில்லை உன்வீட்டுக் கண்ணாடியில் ரசம் பூசியது நீயா  நானா இதைச் சொல்ல பிளாடோவும் சாக்ரடீசும் தேவையா- கொஞ்சமே யோசித்தாலும் விளங்கும் - உண்மையில்.. எனக்கு  பிம்பம் என்ற ஒன்றோ அது தெரிவது என்பதோ   நான் அறியாத ஒன்று எனக்குத் தெரியாதது  நீயாக  ஏதோ செய்கிறாய் பின்னர்  கூப்பாடு போட்டு  ஊரைக் கூட்டுகிறாய் மெழுகு வத்தி ஏற்றி  கோஷம் போட்டு நியாயம் வேண்டும் என்கிறாய்
பெயரிழந்த பறவை பெயர் கொத்திப்பறந்த ஏதோ ஒன்று  மரத்தின் உச்சியில்  அமர்ந்து உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது என்னை.. தேகமெங்கிலும் அந்நிய வாசனையோடு சுயத்தை இழந்துக்கொண்டு  நான்.. உயிர் திருகும் வலியில் என் உணர்வுகளை கடத்திக்கொள்கிறது அதனுள்.. பெயரிழந்த பறவையாகிறேன் நான் குற்றத்தின் சுமையும் என் சிறகின் மேல்..   ****************************** ************ சிதறல் துளி உறங்கியும் உறங்காமலும்  இருக்கின்ற விடியலை  மொத்தமாய் குத்தகை எடுத்துக்கொள்கின்றன உன் நினைவுகள். என் கனவு, நினைவு,  எல்லாமாகிப்போகின்றன  உன் விரலிருந்து கசிந்த  வார்த்தைகள்.. சுவாசமாய் உட்செல்லும்  காற்று தீர்மானமாய் சொல்லும் உன் வார்த்தைகளின்  வெப்பத்தை.. உடலெங்கும் வழிந்தோடும்  குருதி மட்டுமே உணரும்  பிரியம் மேலிடுகிற  உன் ஒவ்வொரு ஸ்பரிசத்தின்  குளிர்ச்சியையும். உன் அளவிடமுடியா  பிரியத்தின் முன்  சிதறல் துளியாகிறேன்  நான். ****************************** **************** யுகங்களின் தேவதைகளுக்கான  இலக்கணம் கண்ணீராலும், துன்பத்தாலும்  மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. தேவதயென்றாலும், தாடகையென்றாலும் பெண் பெண்ணாய்

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு....

3. அழகியசிங்கர் எழுதும் கதைகளில் நான்தான் கதாபாத்திரமாக வருவேன்.  என்னைப் பற்றிதான் அவர் எழுதுகிறாரோ என்ற சந்தேகம் எனக்குள் எழும்.  ஆனால் அவர் எழுதும் எந்தக் கதையாக இருந்தாலும் முதலில் என்னிடம்தான் படிக்கக் கொடுப்பார். பின் அவர் என்னுடன் பேசும்போது, உன்னையேதான் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறேன் என்பார் ''ஒரு பத்மநாபன் உங்கள்முன் நேரிடையாக நின்று கொண்டிருக்கிறேன்.  இன்னொரு பத்மநாபன் கதைகளில்'' என்பேன். அவர் சிரித்துக்கொள்வார்.  ''எழுதுவதற்கு என்ன அனுபவம் வேண்டும்?'' என்று கேட்பேன்.  ''நம் வாழ்க்கையே ஒரு அனுபவம்தான்.  ஒன்றும் செய்யாமலிருந்தாலும் அனுபவம்தான்.'' என்பார். இதோ அவரைப் பிரிந்து வந்துவிட்டேன்.  கும்பகோணம் வட்டாரத்தில் எனக்கு வேலை.  மாற்றல்.  மாற்றல் ஏமாற்றமா மாற்றமா? கடந்த 24 ஆண்டு வங்கி வாழ்க்கையில் ஒரே விதமான இடம் அலுப்பாகத்தான் இருந்தது.  தலைமை இடம்.  வீடு.  10லிருந்து 5வரை என்று ஒரேவிதமான இயந்திரத்தனம் அலுப்பாகத்தான் இருந்தது. எல்லாம் அலுப்பு. பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டிருக்கிற அலுப்பு.  மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன்.

மௌனியுடன்...

  சிதம்பரம்  1969-1971 (பிறகும் விட்டு விட்டு) சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் அழகிய சிங்கர் அவர்களை  சென்னை புத்தகக் கண்காட்சி ஒன்றில் பார்த்தேன் . நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் சென்னைக்கு வருகிறேன். என் தம்பி சேகருடன் ஸ்டால் ஸ்டாலாகச் செல்கையில் பார்த்தேன். வங்கிப் பெயரைச்சொல்லி அழைத்தேன். என்னைத்தெரிகிறதா என்றேன்.  தியாகராஜன் தானே - ஏன் ஞாபகமில்லாமல் என்றார் ?    எப்படி என்றேன்.    இந்தியன் வங்கியைச் சொல்லட்டுமா ? இல்லை தொழில் கவிதையைச் சொல்லட்டுமா என்றார்.   தூக்கிவாரிப் போட்டது.   எனக்கு ஒரு கவிதை.    ஆனால் தொகுப்பாசிரியரான அவருக்கு - அந்தத் தொகுப்பில் குறைந்தது ஐநூறு கவிதைகளாவது இருந்திருக்கும் என நினைக்கிறேன். என்னுடையதோ ஒன்றே ஒன்று. கணையாழியில் வெளியானது என்று நினைப்பு.  சிறிது அரட்டை - வங்கி, டிரான்ஸ்பர் பாலிசி பற்றி, இரண்டாண்டு ரூரல் கட்டாயம் பற்றி, புத்தகங்கள், அவரது இதழ் பற்றி.. நானும் அழகியசிங்கரும் இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் வெகு அரிதாகவே அதுவும் சில மணித்துளிகளே சந்தித்துப் பேசியிருப்போம்- அவரது வேலை அப்படி; என்னுடையது பர்சனல் அசிஸ்டன்ட் என்ற உத்தியோகம். அந்த

துடைத்து எறிய

  காற்றில்   மிதந்து அல்லது   அல்லாடிப்   பறந்து தன்மீதே குழந்தையின்   கிறுக்கெழுத்தில் நல்ல   நீல   நிற   மசியினில் எழுதப்பட்டிருந்த அந்த   சில   வரிகளைக்   கொண்டு அது   யாரைத்தேடுகின்றது ? மிதந்து   நடனமாட தென்றலையா ? யாராவது   படித்து " ஆஹா "  போடுவதற்கா ? எழுதிய   குழந்தை   வந்து மீதத்தை   எழுதி   முடிக்கவா ? நானறியேன் - எடுத்து என்    காலணியிலிருந்த அழுக்குத்துளியைத் துடைத்தெறிந்தேன் -

வாழ்வாதாரம் என்றொன்றைத் தேடி..!

      எனது நிழல் வரைந்துக் கொண்டி ரு க்கிறது இன்னும் என்னை..  எவ்வளவு பெரிய அபத்தக் குற்றச்சாடல்?? எழுதிப் புரியாத வாழ்வு எழுதப் புரிதலென்பதில்     உன்னைப் போலவே எனக்கும் உடன்படிதலில் இல்லை பேரன்பே!                                                 Reply Forward

சந்தை

    வீட்டில் செய்த பண்டங்களை விற்க கடைகடையாய் ஏறி இறங்கினேன். ஒரு கடைகாரனும் என் பண்டத்தை கடையில் வைத்து விற்க சம்மதிக்கவில்லை… பண்டங்களை நானே தின்று தீர்க்கவேண்டியதாகிவிட்டது. அடுத்த நாளும் பண்டங்களை செய்தேன்.. விற்பனை செய்ய தெருவெங்கும் கூவிச்சென்றேன். யார் வீட்டு கதவுகளும் திறக்கவில்லை காசு கொடுத்து வானொலியில் என் பண்டத்தின் பெயரை ஒலிக்கச்செய்தேன். ஒன்று கூட விற்கவில்லை. சுவரொட்டிகளும் விளம்பரங்களும் பத்திரிக்கைகளும் எதனாலும் கைகூடவில்லை விற்பனை. நடுத்தெருவில் வீசியெறிந்தேன் என் பண்டத்தை. வீதியெங்கும் சிதறிக்கிடந்தவற்றை என்னவென்று பார்த்து பின்னர் சுவைத்தனர் ஜனங்கள். அடுத்த நாள் பண்டத்தை சமைக்கத்துவங்கிய போது வாசலெங்கும் நுகர்வோர்களின் வரிசை.                              

வெயிலிலிருந்து மற்றொன்றாக

பகலின் சுவர்களில் பட்டுத்  தெறிக்கும் வெயில் வாலாட்டுகிறது ஒரு நாயின் நிழலில் சித்திரக்கோடுகளை  தீட்டி நெளிகிறது ஒரு சாளரத்தின்  நிழலில் மரத்தில் இருந்து ஒரு துண்டாய்  உடைந்து ஊர்ந்து பறக்கிறது ஒரு பறவையின் நிழலில் அன்பொழுக தன் குட்டியை நக்கி கொஞ்சி மகிழ்கிறது ஒரு பூனையின் நிழலில் கருவை சுமந்தபடி பெருமூச்செடுத்து நடக்கிறது ஒரு கர்பிணியோடு ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறி மாறி பயணித்த வெயில் கடலில்  விழுந்து பிரசவிக்கிறது எண்ணிக்கையற்ற விண்மீனை

ழ 6 வது இதழ்

வருகை கலையாத மேகங்களின் முன்னால் காற்றுக்கு மிகவும் காத்திருந்து அசைகின்ற மரஇலைகள் லேசாக சோகம் காட்டும். முகம் வெளுப்பாய் கருமையில் சிவந்து கன்றிப்போய் கன்னங்கள் வாடி கண் சோர்ந்து தலைமுடி கலைய பார்வை உலர்ந்து அதுவும் முடியாமல் கைகளை பின்னால் கோர்த்து நடந்து நடந்து களைத்துப் போய் வானம் பார்த்து எப்போதோ ஒருமுறை கேட்கும் மனது உறுத்தும் பறவைக்குரல் கேட்டு நனையும் அவசரத்தின் அழைப்பாய் அடிக்கடி எழும்பும் மணியோசை கவனத்தைக் கலைக்க வாடிய முகமும் கூடியவயிறும் கைத்தாங்கி அணைத்துக்கொண்டே உள்ளேசெல்ல வெண்சீறுடை செவிலியர் கண்டிப்பு சாந்தம் கலந்த பார்வைக்கு ஓசையுடன் கூடிய சிறு நடை கொண்டு வரும் செய்திக்காய் துடித்துப்போகும் உள்ளே தாங்கமுடியாமல் அவதிப்படும் வலி நீண்ட இரக்கமாய் கவலையுடனே கூட எதிர்பார்பாய் மற்றெதுவும் மறிக்காமல் அன்பே முதன்மையாய் மனது பொங்கி வழிந்தோடும் நீ பெறப்போகும் இன்பத்தையும் துன்பத்தையும் மற்றெல்லாவற்றையும் விதியாய்க் கொண்டு வரும் அந்த முதல் அழுகையை தயவுசெய்து பரவவிடு. ஆர். ராஜகோபாலன்

பனிநிலா

பனிக்குஞ்சொன்று கண்டேன். சூரியன் சுட்ட கருஞ்சாம்பலை விலக்கி வெண்ணொளி வீசி வீதிக்கு வந்தது. குளிர்ந்து செழித்தது காடும் நாடும். வெண்ணிலா அதுவென்று சொன்னேன். வியந்து உயரப் பார்த்தவர் விழிகளுள் பனிக் குஞ்சினை புதைத்து வைத்தேன். நாளுக்கு நாள் வளரும் குஞ்சோடு விரியும் ஒளியில் வெளிகளும் வளர்ந்தன.. விண்மீன்களும் குஞ்சுடன் கொஞ்சி களித்தன.

கடிகாரத்திலிருந்து உதிரும் காலம்

ஆடையின் நூலிழைகளைக் காற்றசைத்துப் பார்க்கும் காலம் பட்டுத் தெறிக்கும் வெளிச்சப் புள்ளியில் துளித் துளியாய் திணறும் ஓவியம் தீட்டும் தூரத்து மின்னல் ஆகாயம் கிழித்துக் குமுறிட அதிவேக விலங்கொன்றென மழை கொட்டும் பொழுதொன்றில் வனாந்தரங்களைத் திசைமாற்றவென எத்தனிக்கும் அதே காற்று செட்டைகளைத் தூக்கி நகரும் வண்ணத்துப் பூச்சிக்கு ஏரி முழுவதும் குடித்திடும் தாகம் சோம்பலில் கிடத்தியிருக்கும் உடலுக்குள் உணர்த்தப்படும் தூரத்து ரயிலினோசை மழை , காற்று , குளிர் விழிகள் கிறங்கியே கிடக்கும் பணி நாள் காலை கடிகாரத்திலிருந்து உதிர்கின்றன காலத்தின் குறியீடுகள் துளித் துளியாய்

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு....

2. என் வீட்டிலுள்ளவர்கள் யாருக்கும் நான் பதவி உயர்வு என்ற பெயரில் ஊரைவிட்டு, வீட்டைவிட்டுப் போவதை விரும்பவில்லை.  நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன். அப்பாவிற்கு பெரிய வருத்தம்.  மனைவிக்கு கவலை.  உண்மையில் நான் பதவி உயர்வு பெறுவதால் வருமானத்தில் பெரிய மாற்றம் இருக்காது.  பெண் புலம்ப ஆரம்பித்தாள்.  ''ஏன்ப்பா என் திருமணம் நிச்சயம் ஆன நேரத்தில், நீ வீட்டில் இல்லாமல் இருக்கியே?'' என்று.  உண்மைதான்.  ஸ்ரீதேவி கல்யாணம் நிச்சயமான சமயத்தில்தான் எனக்குப் பதவி உயர்வு வாய்த்தது.  கல்யாணம் மே மாதம் நடக்கப் போகிறது.  எனக்கு பிப்ரவரி மாதம் இந்தப் பதவி உயர்வு கிடைத்து விட்டது.  ஸ்ரீதேவிக்கு கல்யாணம் ஜனவரிமாதம் நிச்சயமாகிவிட்டது.  ஒருவிதத்தில் கல்யாணம் நிச்சயம் செய்தபிறகுதான் நான் கிளம்புகிறேன்.  அந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அழகியசிங்கர் ஏற்பாடு செய்த புத்தகக் கண்காட்சியில் அவருக்கு உதவி செய்ய நானும் அலுவலகம் போகாமல் மட்டம் போட்டிருந்தேன்.  அழகியசிங்கரின் புதிய கதைத் தொகுதி வெளியாகியிருந்தது.  புத்தகம் பெயர் ராம் காலனி.  அழகியசிங்கர் பரபரப்பாகக் காட்சி அளித்தார்.  நானும், அவரும் ஒரே