Skip to main content

பஞ்சு மனசுகள் (சிறுகதை) -


செல்வராஜ் ஜெகதீசன்


கையில் இருந்த பீடியைக் கடைசி இழுப்பு இழுத்துவிட்டு, தூர எறிந்தான் பாலு.
பஞ்சாலையில் இருந்து சங்கு ஊதும் சத்தம் கேட்டது. நைட் ஷிப்டுக்கான அழைப்பொலி. முன்பென்றால், இந்நேரம் கிளம்பி வேக வேகமாக வேலைக்கு போயிருப்பான்.
இப்போது எந்த வித அவசரமும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தான்.
வேலை மட்டும் போயிருக்காவிட்டால் இப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் இவைகள்  எல்லாம்  இல்லாமல் போய் இருக்கும்.
வேலையிலேயே இருந்திருந்தால் கலாவும் கூடவே இருந்திருப்பாள். அப்படியும் சொல்ல முடியாது. வேலை போனதை எப்படி கலா போனதோடு ஒப்பிட முடியும்?
இத்தனை வருடங்கள் கழித்து, எட்டு ஆறு வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகளை விட்டு ஒரு அம்மாவால் இன்னொருவனோடு எப்படிப் போக முடிந்தது?
வா சார் வா அஞ்சு வச்சா பத்து, பத்து வச்சா இருபது என்ற குரல் வந்த திசை நோக்கி அவன் கால்கள் திரும்பின.
ஸ்டாப் குவாட்டர்ஸ் ஒட்டி இருந்த மதிற்சுவர் ஓரம் மாணிக்கம் தன் கடையை விரித்து எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அவன் முன் பெரிய அட்டைத்தாள் ஒன்று விரிக்கப்பட்டு, ஆறு சினிமா நடிகர் நடிகைகளின் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
விளையாட விருப்பம் உள்ளவர்கள், தான் விரும்பும் படத்தின் மீது காசோ பணமோ வைக்கலாம். ஏறக்குறைய எல்லாப் படத்தின் மீதும் காசோ பணமோ வைக்கப்படும் வரை மாணிக்கம் திரும்பத் திரும்ப கூப்பிட்டுக் கொண்டிருப்பான்.
அத்தனை படத்தின் மீதும் காசோ பணமோ வைக்கப்பட்டபின், "எடுக்கலாமா எடுக்கலாமா எடுக்கப்போறேன்" என்று ஒன்றிருமுறை கூவுவான். 
"கூட வைக்கணும்னா இப்பவே வச்சுக்கோ, அப்பால படம் வரச் சொல்லோ பீல் பண்ணி பிரயோஜனம் இல்ல சொல்டேன்" என்று ஓரிருமுறை சொல்லிக் கொண்டிருப்பான்.
காசை வைத்துவிட்டு காத்திருப்பவர்கள்  கொஞ்ச கொஞ்சமாக "சரி எடுப்பா" என்று நச்சரிக்கத் தொடங்கும் போதும் எடுக்க மாட்டான்.
கொஞ்சம் பொறு சார், இதோ எடுத்துடலாம் என்று கொஞ்ச நேரம் கடத்துவான்.
முன்பென்றால், பாலு இந்நேரம் யாரோ ஒருவருக்காக சப்போர்ட் பண்ணி பேசிக் கொண்டிருப்பான்.
"தலைவர் மேல வை சார், வாரி வாரி குடுத்த கை சார்" என்பான்.
"என் கைல கண்டி காசு இருந்தா, இந்நேரம் அப்படியே தலைவர் படத்துல வச்சிருப்பேன் சார்" என்பான்.
இதெல்லாம் போன வாரம் வரை. இன்றைக்கு?
எதுவும் சொல்லாமல், எதையும் செய்யாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான்.
மாணிக்கம் கூட பாலுவைப் பார்த்து "இன்னா அண்ணாத்தே ஒரு மாரியா கீற" என்றான்.
பதில் ஏதும் சொல்லாமல் ஒரு வெற்றுப் பார்வையை வீசினான் பாலு.
"சரி அண்ணாத்தைக்கு ஏதோ மூடு அவுட்டு போல" என்று மாணிக்கம் அட்டைத்தாளின் வலப்புறமாக வைக்கப்பட்டிருந்த கவர்களை கையில் எடுத்தான்.
சீட்டுக்கட்டுக்களைக்   கலைத்துப் போடுவது போல் அந்தக் கவர்களை மாற்றி மாற்றி வைத்தான். 
ஒருவாறாக ஒரு கவரை எடுத்தவன், அதை இரண்டு விரல்களுக்கு மத்தியில் வைத்தபடி "யார் வரப் போறா'னு பார்க்கலாமா, தானைத் தலைவனா, அபிநய சரஸ்வதியா, நாட்டியப் பேரொளியா" என்றவாறு அந்த கவரை ரெண்டு உதறு உதறினான்.
அவன் சொன்னது எல்லாம் அங்கே ஒட்டப்பட்டிருந்த படங்களில் இருந்த எம். ஜி. யார், சரோஜாதேவி, பத்மினி ஆகியோரை.
கவரை ஒருமுறை ஊதி விட்டு, பிரித்து, உள்ளிருந்த படங்களை வெளியே எடுத்தான். மூன்று படங்கள். ஒரு சரோஜாதேவியும் இரண்டு பத்மினியும்.
த்மினியை கலாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் சிவாஜியோடு நடிக்கும் படங்கள் மட்டும். வேறு எந்த நடிகரோடு பத்மினி நடித்த படம் என்றால் அவளுக்கு பிடிக்காது. நிறைய முறை எம்.ஜி.யாரோடு நடித்த படத்திற்கு இவன் கூப்பிட்டு அவள் மறுக்க, பெரிய சண்டையில் போய் முடிந்திருக்கிறது. அந்த சண்டையெல்லாம் கூட ஒரு காரணமாய் இருக்குமா? இதையெல்லாம் ஒரு காரணமாய் அவனால் யோசிக்க முடியவில்லை. எது காரணமாய் இருக்கும் என்று, யோசிக்க முடியாத அளவுக்கு குழம்பிப் போயிருந்தான். பஞ்சாலை வேலை கூட சமீபத்தில்தான் போனது.
"ஏய் என்னப்பா இங்கன நின்னிட்டிருக்கே, ரெண்டு பொண்ணுங்களும் அங்க சாப்டாம காத்துக்கினு இருக்கு"  என்றாவாறு இவன் தோளைத் தொட்டான் குரு.
எதிர் வீட்டுக்காரன். நைட் சிப்ட் வேலைக்கு போகிறான் போல.
"சீக்கிரம் போ, சாப்பிட ஏதாவது வாங்கிட்டுப் போடா" என்றவாறு நடையை எட்டிப் போட்டான்.
வீட்டை நெருங்கும்போது எதிர்வீட்டு வாசலில் குருவின் மனைவி மீனாட்சியோடு மூன்று பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இவனைப் பார்த்ததும் மீனாட்சி "என்னாச்சு போன விஷயம்" என்றாள்.
பதில் எதுவும் சொல்லாமல் பாலு வீட்டுக் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
சித்ராக்குட்டி கூடத்தில் தரையில் ஒரு மூலையில் சுருண்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
பெரியவள் நளினா இவனைப் பார்த்தவுடன் ஓடி வந்து இவன் கையைப் பிடித்துக் கொண்டாள். பாலு "வாங்க சாப்பிடலாம், ஏன் சித்துக்குட்டி தூங்கிட்டா" என்றான் கையில் இருந்த பார்சலைப் பிரித்தபடி.
"இவ்ளோ நேரம் விளயாடிட்டுதான் இருந்தா. அம்மா எப்போ வருவான்னு கேட்டுக்கினே அப்படியே தூங்கிட்டா" என்றாள் நளினா.
"சரி நீ சாப்பிடு" என்றவாறே சட்டையைக் கழற்றி சுவற்றில் இருந்த ஆணியில் மாட்டிவிட்டு, பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் பாலு.
வேக வேகமாய் இட்லியைப் பிட்டு சாப்பிடும் நளினாவையே பார்த்துக் கொண்டிருந்தான். நல்ல பசி போல, சீக்கிரமே சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டு வந்தாள்.
"சரி படும்மா, நாளைக்கு ஸ்கூல் போனம்ல" என்றவாறு பாயை எடுத்து உதறிப் போட்டவன், ஒரு ஓரமாய், சித்ராவை தூக்கி கிடத்தினான். பக்கத்தில் தன் உடலைச் சாய்த்தான். ஒரே அசதியாக இருந்தது.
விட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.
இன்னொரு பக்கம் படுத்துக்கொண்டிருந்த நளினா "அப்பா" என்றாள்.
"என்னம்மா குட்டி"
"அம்மா, எப்போ வருவா?"

"நாளைக்கு வந்துருவாங்க, நீ தூங்கு" என்றபடி நளினாவின் தலையை தடவிக்கொடுக்க ஆரம்பித்தான் பாலு.

Comments