Skip to main content

என்னால் ஏன் குடிக்க முடியவில்லை?

  என்னால் ஏன் குடிக்க முடியவில்லை?

  அழகியசிங்கர்

    பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்தாளர் வண்ணநிலவன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன்.  வழியில் ஒரே கூட்டமாக இருந்தது.  என்ன என்று பார்த்தேன்.  எனக்கும் வண்ணநிலவனுக்கும் தெரிந்த நண்பர்.  கவிஞர்.  குடி போதை அதிகமாகி தெருவில் படுத்து இருந்தார்.  பார்க்க பரிதாபமாக இருந்தது.  பின் அழைத்துக்கொண்டு வண்ணநிலவன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனேன்.  இப்போது கூட அந்தக் கவிஞர் குடிக்காமல் இருக்க மாட்டார். கையில் ரூ400 வைத்திருந்தால் ரூ 200 ஐ குடிப்பதற்காக எடுத்துக் கொண்டு விடுவார்.ஒரு முறை நான் ஏற்பாடு செய்த இலக்கியக் கூட்டத்திற்கு அவரைப் பேசச் சொன்னேன்.  அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.  நீங்கள் குடிக்காமல் கூட்டத்தில் பேச வேண்டும் என்று.  சரி என்று  சொன்னவர்.  கூட்டம் நடக்கத் தொடங்கும் சமயத்தில் குடித்துவிட்டு வந்து விட்டார். வயதில் பெரியவரான எழுத்தாளர் ஒருவரை ஏக வசனத்தில் கூப்பிட்டு அவர் பக்கத்தில் அமரச் சொன்னார்.  உண்மையில் அந்த எழுத்தாளரும் குடிப்பதில் வல்லவர்.  மடா குடியர்.  வயது அதிகரித்து விட்டதால் அவர் முழுக்க முழுக்க நிறுத்தி விட்டார்.     
 
    என்னுடைய பல எழுத்தாள நண்பர்கள் குடிகாரர்கள்.  அவர்களுடன் நான் பழகினாலும் என்னால் மட்டும் குடிக்க முடியவில்லை.  அதில் எனக்கு விருப்பமும் இல்லை.  குடிப்பது தவறா இல்லையா?  ஆனால் என்னால் மட்டும் ஏன் குடிக்க முடியவில்லை. 

    திருவனந்தபுரத்தில் ஒரு வயதான எழுத்தாளர் என்னுடைய நண்பராக இருந்தார்.  அவர் சென்னைக்கு வந்தால், என்னை மாம்பலம் ஹை ரோடில் உள்ள ஒரு ஒயின் கடைக்கு அழைத்துப் போகச் சொல்வார்.  அங்கு எல்லோருடனும் இவரைப் பார்க்கும்போது வித்தியாசமாய் இருக்கும்.  பிரான்டி வாங்கிக் கொள்வார்.  பின் அவர் சகோதரன் வீட்டிற்கு வந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பார். 

    ராத்திரி முழுக்க பேசிக் கொண்டிருப்பார்.  பகலில் மட்டும் சிறிது  நேரம் தூங்குவார்.  அவரால் குடியை நிறுத்த முடியவில்லை.  அவர் மரணம் அடையும்வரை குடித்துக்கொண்டே இருந்தார்.  அவர் திருமணம் செய்து கொள்ளாதவர்.   பல எழுத்தாள நண்பர்கள் அவரைப் பார்க்கப் போவார்கள்.  எல்லோரும் பாட்டில் வாங்கிக் கொண்டு போகாமல் இருக்க மாட்டார்கள். 

    குடியை எப்படி ஒழிக்க முடியும்?  எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் குடியை யாராலும் நிறுத்த முடியாது.  குடிப்பவர்கள் குடித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.  பூரண மது விலக்கு வந்தால் கள்ளச் சாராயம் பெருகி விடும்.  யாரும் குடிப்பதை நிறுத்த மாட்டார்கள். 

    நானும் ஒரு முறை குடித்துப் பார்த்தேன்.  அப்போது ஐஐடியில் உள்ள ஒரு கல்லூரி மாணவன் அறையில்  விஸ்கி என்ற திரவத்தை எல்லோரும் கலந்து கொடுத்தார்கள்.   அதைக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன்.  ஒரே தலைவலி.  வாந்தி எடுத்தேன்.  தூக்கம் வரவில்லை.   அதன் பின் எனக்கு அந்தச் சனியன் மீது நாட்டம் ஏற்படவில்லை.

    இந்தக் குடியை விரும்புவர்கள் என் நண்பர்களாக இருந்தாலும் என்னால் அதை மட்டும் செய்ய முடியவில்லை.  ஒரு காலத்தில் பீர் மாத்திரம் கொஞ்சம் குடித்துப் பார்த்தேன்.  என்னால் அதைக் கூட எப்போதும் தொட முடியவில்லை.

    குறிப்பாக குடிப்பது எதாவது சந்தோஷத்தை வெளிப்படுத்ததான்.  என் அலுவலக நண்பர் ஒருவருக்கு திருமணம் ஏற்பாடு நடந்தது.  அவர் எல்லோரையும் அழைத்துப் போய் விருந்து வைத்தார்.   பின் மிலிடரியில் கிடைக்கும் ஒயிட் ரம் ஒன்றை கலந்து எல்லோருக்கும் கொடுத்தார்.  பார்ப்பதற்கு குடிக்கும் தண்ணீர் மாதிரி இருந்ததை நானும் கால் டம்ளர் குடித்துப் பார்த்தேன்.  கொஞ்ச நேரத்தில் என் தலை மறத்து விட்டது.  நான் பயந்து விட்டேன்.  அதிலிருந்து துளியாய் ஒட்டிக்கொண்டிருந்த என் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. 

    எப்போதும் டாஸ்மா கடை முன் நின்றுகொண்டு குடிக்க வருபவர்களைப் பார்க்கும்போது எனக்குப் பரிதாபமாக இருக்கும்.  காளி என்ற கிராமத்தில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் பணி ஆற்ற சென்றேன்.  அங்கே ஒரு கீழ்நிலை ஊழியர்.  அடிக்கடி டீக் கடைக்குப் போவதுபோல் சாராயக் கடைக்குச் சென்று குடித்துவிட்டு வருவார்.  எனக்கு அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும்.  அவரை நம்பி இருக்கும் அவர் குடும்பத்தை நினைத்து வருத்தமாக இருக்கும்.  அவர் ஒரு முறை குடியில் பஸ்ஸில் சரியாக ஏற முடியாமல் கீழே விழுந்து அடிப்பட்டுக் கொண்டார்.  அவருக்கு யார் அறிவுரை கூறுவது.  இப்போது அவர் உயிரோடு இருக்கிறாரா என்பது கூட தெரியாது. 

    அதில் என்ன இருக்கிறது.  குடி எப்படி மக்களை மயக்குகிறது.  சிலர் பேத்தலாக சொல்ல கேட்டிருக்கிறேன்.  குடித்தால்தான் கவிதை  எழுத வரும் என்று.    அதை நான் நம்பவில்லை.  ஒருமுறை பிரமிள் பற்றி ஒரு கூட்டம் ஒரு ஓட்டலில் நடந்தது.  எல்லோரும் கையில் கிளாஸ்ஸில் தீர்த்தம் நிரப்பி அமர்ந்திருந்தார்கள்.  நானும் அங்கிருந்தேன்.  ஒரு சொட்டு கூட நான் குடிக்கவில்லை.  நீங்கள் நம்பாவிட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.  அங்கு நாங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததை ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை போட்டோ எடுத்து பத்திரிகையில் பிரசுரம் செய்திருந்தது.  நானும் இருந்தேன்.  ஆனால் குடிக்கவில்லை.

    எப்போதும் மது அருந்துதலையும், சிகரெட் பிடிப்பதையும் எதிர்ப்பது பாட்டாளி மக்கள் கட்சிதான் முன்னணியில் நிற்கிறது.  ஏன் எனில் அந்தக் கட்சியில் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் மருத்துவர்கள்.  ஆரம்ப முழுவதும் அந்தக் கட்சியில் உள்ள தலைவர்கள்  இதற்கு எதிராக உள்ளார்கள்.  மற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்துகொண்டு மதுவிலக்கு பிரச்சாரம் செய்தாலும், மனப்பூர்வமாக மதுவிலக்கு வேண்டும் என்று நினைப்பது பட்டாளி மக்கள் கட்சியாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது.  எல்லாக் கட்சியிலும் தொண்டர்கள் குடிக்காமல் இருக்க மாட்டார்கள்.  ஒரு மாநாடு என்றால் குடித்துவிட்டு தடுமாறும் தொண்டர்கள் இல்லாமல் இருப்பதில்லை. 

    மதுவை முழுக்க முழுக்க நீக்க முடியுமா?   எனக்குத் தோன்றவில்லை அதை நீக்க முடியும் என்று. தனிப்பட்ட ஒவ்வொருவரும் திருந்தினால்தான் இது முடியும்.  அதையும் கேட்கும் நிலையில் யாருமில்லை.  நீ யார் அதைச் சொல்ல என்று சொல்பவர்கள் தான் அதிகம். 

    இதோ நான் எழுதுவதை நிறுத்தி விடுகிறேன்.  எங்கள் தெரு கோடியில் ஷண்முகம் குடித்துவிட்டு தள்ளாடியபடி வருகிறான்.
   
   

Comments