Skip to main content

சின்ன தப்புகள்....

....

அழகியசிங்கர்



குவியம் இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்த நேர்பக்கம் என்ற என் புத்தக அறிமுகக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது. சிறப்புப்
 பேச்சாளராக வந்திருந்த அசோகமித்திரனுக்கும், என் பொருட்டு பேச வந்திருந்த ப்ரியாராஜ், க்ருஷாங்கினி, லதா ராமகிருஷ்ணன், உமா பாலு அவர்களுக்கும், குவியம்
சார்பில் ஏற்பாடு செய்த கிருபானந்தன், சுந்தர்ராஜனுக்கும் என் நன்றி. நன்றி. நன்றி.
அசோகமித்திரன் பேசுவதைக் கேட்கும்போது அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த நான் என்னை மறந்து அவர் பேச்சை ரசித்து சிரிக்க ஆரம்பித்து விட்டேன்.

வெள்ளத்தால் ரொம்பவும் நனையாத கொஞ்சம் நனைந்த புத்தகங்களை அள்ளி எடுத்துக்கொண்டு கூட்டத்திற்கு வந்திருந்தேன்.என் புத்தகத்தில் புத்தகம் முடிந்தபின் நான் சில சின்ன தப்புகளைச் செய்துவிட்டேன். இந்தப் புத்தகத்தில் அட்டைப் பட ஓவியத்தை வரைந்தவர் கவிஞர் எஸ் வைதீஸ்வரன். இதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். அற்புதமான ஓவியம் அது. உண்மையில் இந்தப் புத்தகம் வந்ததே ஒரு விபத்துதான். கிட்டத்தட்ட 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு புத்தகங்களுக்கு அட்டை பிரிண்ட் செய்திருந்தேன். மூன்று புத்தகங்களை அப்போதே கொண்டு வந்துவிட்டேன். நேர் பக்கம் என்ற பெயரில் அப்போது கொண்டு வர இருந்த என் புத்தகம் மாட்டிக்கொண்டது.

அந்தப் புத்தகத்திற்கான அட்டையைத் தயாரித்து ஒரு மூலையில் கட்டி வைத்திருந்தேன். கிட்டத்தட்ட 600 அட்டைகள் அடித்து வைத்திருப்பேன். எப்படி இந்தப் புத்தகத்தைத் தயாரிப்பது என்ற குழப்பம் என்னிடம் இருந்து கொண்டு இருந்தது. பல இலக்கிய நிகழ்ச்சிகளின்போது நான் எழுதிய கட்டுரைகளைத் திரட்டி வைத்துக் கொண்டு இருந்தேன். அதே போல் பல படைப்பாளிகளைப் பற்றியும் நான் எழுதி வைத்திருந்தேன். உண்மையில் எழுத்தாளர்களைப் பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

க்ருஷாங்கினி பேசும்போது, 'பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி எதுவும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை' என்று கூறினார். அது உண்மைதான். பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி நான் கட்டுரைகள் எழுதியிருந்தாலும், சேர்க்க மறந்து விட்டேன். அதேபோல் இன்னும் சில படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதி இருந்தாலும் சேர்க்க மறந்து விட்டேன். வைதீஸ்வரன் கவிதைகள் குறித்து நான் எழுதிய கட்டுரை, வாசகர் கடிதப் பாணியில் எழுதியிருந்தேன். பலருக்கு அது புரியாது. அத்தனை வாசகர் அவர் கவிதைகளைப் பற்றி எழுதி இருக்கிற என்று
கூடத் தோன்றும். வாசகர் கடிதப் போர்வையில் எல்லாம் நான் எழுதியதுதான். உண்மையில் கட்டுரை முடிவில் நான் இதைத் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். மேலும் வைதீஸ்வரன் கவிதைகளைக் குறித்து இன்னும் ஒரு முறை படித்துவிட்டு எழுத வேண்டுமென்று கூடத் தோன்றியது. நான் மதிக்கும் இன்னொரு கவிஞர் ஞானக்கூத்தன். அவரைப் பற்றி நான் எதுவும் இத் தொகுப்பில் கட்டுரை எழுதவில்லை.

அசோகமித்திரன் சிறுகதைகளைக்குறித்து, நாவல்களைக் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளைக் குறித்து பெரிய அளவில் ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதனால் இந்த நேர்பக்கம் என்ற பெயரில் கொண்டு வந்த இந்தத் தொகுப்பு இன்னும் தொடரும். சிறுபத்திரிகைகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதும்போது, பிரம்மராஜனின் மீட்சி, சதங்கை, ஞானரதம் பற்றியெல்லாம் எழுத மறந்து விட்டேன். அடுத்தப் பதிப்பு வரும்போது இந்தத் தவறை திருத்திக்கொள்வேன்.
142 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை 120 ரூபாய்தான். வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட இப் புத்தகத்தை ரூ 60 க்குத் தர தயாராக இருக்கிறேன்
.
நான் கவிதைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதாக அசோகமித்திரன் தெரிவித்தார். உண்மையில் கவிதையை விட சிறு
கதை எழுதுவதுதான் ரொம்பவும் சிரமம். பொறுமை வேண்டும். நான் அதற்கான முயற்சியை எப்போதும் செய்துகொண்டுதான் இருப்பேன். ஆனால் நான் கவிதையை நினைத்தால் எழுதிவிடுவேன். இப்படி எழுதுகிற கவிதைகளில் பல கவிதைகள் எடுபடாமல் கூடப் போய்விடும். யார் கவிதையை நான் படித்தாலும் சரி, என் கவிதையை நான் எழுதினாலும் சரி எது சிறந்த கவிதை என்பதில் எனக்கு குழப்பம் இருந்துகொண்டுதான் இருக்கும்.

சரி இந்தப் புத்தகத்தின் அடுத்தப் பதிப்பு வரும் என்று ஆர்வமாய் ஒருவர் கேட்கிறார். உடனே வரவேண்டும் என்பது என் ஆசைதான். ஆனால் தெரியாமல் 100 பிரதிகள் அடிப்பதற்குப் பதில் 360 பிரதிகள் அடித்து விட்டேன். வெள்ளம் புண்ணியத்தால் கொஞ்சம் புத்தகங்கள் பிரியா விடை பெற்றுக்கொண்டு என்னை விட்டுப் போனாலும், மீதி உள்ள எல்லாப் புத்தகங்களையும் விற்க குறைந்தது ஐந்தாறு வருடங்களாவது ஆகும். அதனால் இப்போதே என் கம்ப்யூட்டரில் நான் செய்த சிறு சிறு தவறுகளை சரி செய்து விடுகிறேன். ஏன் எனில் எனக்கு அப்போது கொண்டு வரும்போது திரும்பவும் சின்ன தப்புகள் மறந்து போனாலும்போய்விடும்.

Comments