Skip to main content

இலவசமாய் க நா சு கவிதைகள்


அழகியசிங்கர்


க நா சு நூற்றாண்டை முன்னிட்டு 2011ஆம் ஆண்டு சில க நா சு கவிதைகள் என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தேன்.  ஏற்கனவே மையம் வெளியீடாக வெளிவந்த புத்தகம்.  14 கவிதைகள் கொண்ட சிறிய தொகுதி இது.  500 பிரதிகள் இதை அச்சடித்து நான் எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  நான் அப்போது மயிலாடுதுறையில் இருந்தேன்.  அங்கு நான் சாப்பிடப் போகும் ஓட்டலுக்குச் சென்று, இப் புத்தகத்தின் சில பிரதிகளை கொண்டு வைத்தேன்.  ஓட்டல் கல்லாவில் இருப்பவர், "இதெல்லாம் விற்க முடியாது," என்று புத்தகம் பார்த்தவுடன் சொல்ல ஆரம்பித்தார்.  நான் சொன்னேன் :  "இதெல்லாம் விற்க வேண்டாம்.  இலவசமாகக் கொடுங்கள்.   
கநாசு புதுக்கவிதையின் முன்னோடி....அவர் பெயரை கேள்விப்பட்டிருக்கிறீரா,"என்று கேட்டேன்.  முழித்தார் மனிதர்.  
அதன் பின் வெற்றிலைப் பாக்குக் கடையில் கொண்டு போய் கொடுத்தேன். இலவலசமாகக் கொடுங்கள் என்று சொன்னாலும் எல்லோருக்கும் அலட்சியம்.
நான் மயிலாடுதுறையிலிருந்து சீர்காழீ பஸ்ஸில் ஏறி அலவலகம் செல்வேன்.  பஸ்ஸில் எல்லோரையும் ஒரு பார்வை பார்ப்பேன்.  யாராவது பத்திரிகை எதாவது படித்துக் கொண்டிருந்தால் போதும்.  உடனே போய் சில க நா சு கவிதைகள் புத்தகத்தை நீட்டுவேன்.  சிலர் வாங்கிக் கொள்வார்கள்.  சிலர் முறைத்துப் பார்ப்பார்கள். சிலருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டு விளக்குவேன்.  க நா சு எப்படி கவிதை எழுதியிருக்கிறார் என்று.  நாம் ரசிக்கிற ஒரு விஷயத்தை மற்றவர்களால் ரசிக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குண்டு.  இந்தத் தொகுதியில் நான் ரசித்த கவிதை இதுதான்.
இதன் முதல் பதிப்பைக் கொண்டுவந்த மையம் ராஜகோபாலன் போற்றுதலுக்கு உரியவர்.  இந்தப் புத்தக வெளியீட்டு விழா கூட்டத்தில் இந்தப் புத்தகம் வந்ததை அறிந்து க நா சு வெளிப்படுத்திய மகிழ்ச்சி இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.  கோபிகிருஷ்ணனின் ஒவ்வாத உணர்வுகள் என்ற மகத்தான சிறுகதைத் தொகுதியும் அன்றுதான் மையம் வெளியீடாக வந்தது. இன்னொரு பதிப்பாக இந்தப் புத்தகம் திரும்பவும் கொண்டு வந்து இலவசமாகக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.  ஆனால் இந்த முறை 100 பிரதிகள்தான் அச்சடிக்கப் போகிறேன். 

விலை

 ஓ ! ஓ ! ஓ !  ஓ !
  இவனுக்குத்  தேச பக்தி
  நிறைய வுண்டு. தேசத்தை
  விற்கும் போது
  நல்ல விலை போகும் படிப்
  பார்த்துக் கொள்வான்
  இவனுக்கு தேச பக்தி
  நி-றை-ய வுண்டு
  ஓ !  ஓ !  ஓ ! ஓ !


   

Comments