Skip to main content

என் புத்தக ஸ்டால் எண் 594



அழகியசிங்கர்



இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த ஸ்டாலைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை.  எபபோதும் எதிலும் நான் முதலும் இல்லை கடைசியிலும் இல்லை. எங்குப் போனாலும் அப்படித்தான் வாய்க்கும்.   எல்லாம் நடுவில்தான் கிடைக்கும்.  பள்ளிக்கூடத்திலோ கல்லூரியிலே நான் முதல் பெஞ்சிலோ கடைசிப் பெஞ்சிலோ உட்காரமாட்டேன்.  அதேபோல் இதுவரை புத்தகக் காட்சியில முதல் ஸ்டாலோ கடைசி ஸ்டாலோ வந்தது கிடையாது.  ஆனால் இந்த முறை 594 என்ற கடைசி ஸ்டால் கிடைத்துள்ளது.  என்ன செய்வது?

என்ன வரிசை என்பது தெரியவில்லை.  ஐந்தாவது வரிசையா முதல் வரிசையா என்பது தெரியவில்லை.  ஆனால் அந்த வரிசையில் நடக்க ஆரம்பிப்பவர் பாதிதூரம் நடந்தவுடன்,  ரொம்ப ரொம்ப களைத்துப் போய்விடுவார்கள்.  கடைசி ஸ்டாலை ஏன் பார்க்க வேண்டும் அப்படியே போய்விடலாம் என்று போய் விடுவார்கள்.  

அதனால் நான் புத்தகங்களை மிகக் குறைவான பிரதிகளே எடுத்துக்கொண்டு வர உத்தேசித்துள்ளேன்.  இந்த முறை புத்தகக் காட்சியை முன்னிட்டு ஐந்து புத்தகங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளேன்.  நூறாவது இதழான விருட்சம் இபபோது கொண்டு வர முடியாது.  புத்தகக் காட்சி முடிந்தபின்தான் யோசிக்க முடியும். 

ஐந்து புத்தகங்களில் இரண்டு புத்தகங்களான அழுக்கு சாக்ஸ் என்ற பெருந்தேவியின் கவிதைத் தொகுதியும், விருட்சம் பரிசுப் பெற்ற கதைகள் தொகுதியும் அச்சாகி விட்டன.  வைதீஸ்வரனின் அதற்கு மட்டும் ஒரு ஆகாயம் என்ற புத்தகம் இன்னும் சில தினங்களில் கிடைத்து விடும்.  நான்காவது புத்தகமான அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு என்ற புத்தகம் தயாராகிறது.  அதேபோல் ஞானக்கூத்தனின் புதிய கவிதைத் தொகுதியும் தயாராகிறது.

புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நான் ஏற்கனவே ஸ்டால் வாடகையைக் கட்டிவிட்டேன்.  இன்னும் பத்தாயிரம் வரையாவது செலவாகும்.  ஆனால் வரவு? சந்தேகம்தான்.  கடைசி ஸ்டாலில் அமைதியாக உட்கார்ந்திருப்பதைத் தவிர வேற வழி இல்லை. தூரம் வேறு என்னை அச்சப்பட வைக்கிறது.  மாம்பலத்திலிருந்து புத்தக ஸ்டால் நடக்கும் இடம் வரை வருவதற்குள் போதும் போதுமென்றாகி விடும்  அதனால் நான் மெதுவாகத்தான் ஸ்டாலை திறக்க வருவேன்.  எனக்கு உதவி செய்ய ஒரு நண்பர் வரத் தயாராகி உள்ளார்.  எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி உதவி செய்ய ஒருவர் கிடைக்கிறார் என்றால் என்னால் மனம் திறந்து அவரை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை.  இந்த முறை இதன் மூலம் நஷ்டம்தான் என்று கணக்கு எழுதி வைத்துவிட்டேன்.  இதைப் படிப்பவர்கள் ஏன் அழுது புலம்புகிறீர்கள் என்று என்னைக் கேட்கத் தோன்றும்.  ஆனால் உண்மை என்னவென்றால் இதுமாதிரி ஒன்று நிகழப் போவதையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகங்களை நான் மிக மெதுவாக விற்றுவிட முடியும் என்று நம்புகிறேன்.  ஏனென்றால் நான் கொண்டு வரும் எல்லாப் புத்தகங்களும் தரமான புத்தகங்கள்.  விலை குறைவான புத்தகங்கள்.

விருட்சம் பரிசுப் பெற்ற கதைகள் என்ற புத்தகத்தில் 12 படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.   தமிழில் வெளிவந்துள்ள பல முக்கிய பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ள குறிப்பிடப்பட வேண்டிய படைப்பாளிகளின் கதைகள் அடங்கிய புத்தகம் இது.  இப் புத்தகம் உருவான பிறகு எனக்கு வேறு சில புத்தகங்கள் இதுமாதிரி கொண்டு வரயோசனை போய்க் கொண்டிருக்கிறது. யார் கதைகள் இடம் பெற்றுள்ளன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.  1. எஸ் செந்தில்குமார் 2. எஸ் ராமகிருஷ்ணன் 3. ப முகமது ஜமிலுதீன் 4. பாவண்ணன் 5. சுகா 6. உஷாதேவி 7. அ முத்துலிங்கம் 8. அசோகமித்திரன் 9. யுவன் சந்திரசேகர் 10. ஐசக் அருமைராஜன் 11. அட்டனத்தி 12. நர்சிம். ஒவ்வொரு கதையும் படிக்க ஆவலைத் தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. 

பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ் என்ற கவிதைத் தொகுதி ஒரு வித்தியாசமான தொகுப்பு.  இதற்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளேன்.  தமிழில் எதிர் கவிதைகள் சிலவற்றை எழுதி உள்ளார். குடிவிதி என்ற ஒரு கவிதை.

பெண்ணோடு சேர்ந்து
குடிக்கும்போது
அவள்
பெண்ணாகத் தோன்றினால்
நீ இன்னும் குடிக்கவேண்டும்
தேவதையாகத் தோன்றினால்
உடனே அங்கிருந்து நகரவேண்டும்

சரி புத்தகக் கண்காட்சியில் கோடியிலும் கோடியில் வீற்றிருக்கும் என் புத்தக ஸ்டால் எண் 594 தான்.
 
   

Comments