Skip to main content

இரண்டு சந்தன மாலைகள்

அழகியசிங்கர்


இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் பதவி மூப்பு அடையும்போது என் அலுவலக நண்பர்கள் எனக்கு சந்தன மாலை அணிவித்தார்கள்.  அதை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.  ஒருமுறை  விசிறி சாமியாரைப் பார்க்க திருவண்ணாமலை போனபோது அவர் தங்கிருந்த வீட்டு வாசலில் உள்ள ஆணியில் ரோஜாப்பூ மாலைகளை தூர எறியாமல் மாட்டியிருந்தார்கள்.  ரோஜாப்பூ மாலைகள் நிறம் இழந்து கருத்த நிறத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.  ஏன் அதைத் தூக்கி எறியாமல் மாட்டியிருந்தார்கள் என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.  விசிறி சாமியார் ஒரு யோகி.  அதற்கு எதாவது காரணம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் சந்தன மாலை அப்படி அல்ல.  அதை எத்தனை ஆண்டுகளாக இருந்தாலும் பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனக்கு அணிவித்த அந்த சந்தன மாலையை இன்னும் தூக்கி எறியாமல் வைத்திருக்கிறேன்.

இப்போது இன்னொரு சந்தன மாலை கிடைத்திருக்கிறது.  படிகம் என்ற நவீன கவிதைக்கான இதழ் நடத்தும் இலக்கியக் கூட்டத்தில்.  எனக்கு ஆச்சரியம்.  பெரும்பாலும் எந்த இலக்கியக் கூட்டங்களிலும் நான் பார்வையாளனாகத்தான் இருப்பேன்.  பேசுபவனாக இருந்தாலும் மேடையில் அமர்வதில் சங்கடப்பட்டு அமர்வேன்.  ஆனால் என்னை மேடையில் உட்கார வைத்து சந்தனமாலையைக் கொடுத்து கௌரவப்படுத்திய படிகம் இதழிற்கு என் நன்றி உரித்தாகும். இதுவரை எந்த இலக்கியக் கூட்டத்திலும் (கூப்பிடுவதே கஷ்டம்) கூப்பிட்டாலும் மேடையில் உட்கார வைத்தாலும் மாலையெல்லாம் போட மாட்டார்கள்.  நான் பத்திரப்படுத்த இரண்டாவது சந்தன மாலை கிடைத்துவிட்டதாக நினைக்கிறேன்.  படிகம் இலக்கியக் குழுவிற்கு என் நன்றி.  சந்தன மாலை மட்டுமல்லாமல் மூன்று கவிதைப் புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன.  லக்ஷ்மி மணிவண்ணன் எழுதிய கேட்பவரே என்ற கவிதைத் தொகுதி கிடைத்தது.  320பக்கங்கள் கொண்ட தொகுதி இது. ரொம்ப நாட்களாக லக்ஷ்மி மணிவண்ணன் எழுதுவதை கவனித்து வருகிறேன்.  இத் தொகுப்பில் உள்ள எல்லாக் கவிதைகளையும் வாசித்து அது குறித்து எழுத வேண்டும்.  அதேபோல் கைலாஷ் சிவன் எழுதிய சூனியப்பிளவு என்ற கவிதைத் தொகுதி.  132 பக்கங்கள் கொண்ட தொகுப்பு.  இதையும் வாசிக்க வேண்டும்.  மூன்றாவது தொகுப்பாக ராஜன் ஆத்தியப்பன் எழுதிய கருவிகளின் ஞாயிறு என்ற தொகுப்பு.  80 பக்கம் கொண்ட தொகுப்பு இது.  இம் மூன்று புத்தகங்களையும் படித்து எழுத வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு கவிதைப் புத்தகத்தைப் படிக்கும்போது அது கொடுக்கும் உத்வேகம் என்னையும கவிதை எழுதத் தூண்டும் என்று நினைக்கிறேன். 

நேற்று நடந்த கூட்டத்தில் நான் சற்று தாமதமாகத்தான் சென்றேன்.  என் நெடுநாளைய நண்பர் சண்முகம் பேசிக்கொண்டிருந்தபோது சென்றேன். அதனால் மற்றவர்கள் பேசியதைக் கேட்கவில்லை.  முக்கிய நிகழ்ச்சியாக கவிதை வாசிப்பு கூட்டம் நடந்தது.  எல்லோருடைய கவிதைகளையும் வாசிக்கக் கேட்டேன்.  கவிதையை வாசிக்கக் கேட்கும்போது கேட்பவர்களுக்கு என்ன மனநிலையை ஏற்படுத்தும்.  கவிதையை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியுமா?  எல்லோரும் கவிதைகள் வாசிக்கும்போது அந் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.  எனக்கும் கவிதை வாசிக்க வேண்டுமென்று தோன்றியது.

ஒருவர் ஒரு கவிதையை வாசிக்கும்போது பார்வையாளர்கள் அக் கவிதையைக் குறித்து என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள உடனடியாக வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது.  லக்ஷ்மி மணிவண்ணன் முதலில் கவிதை வாசித்தார்.  அவர் கவிதையை சத்தமாக அவர் வாசித்தபோது பார்வையாளர் மனநிலை அதை எப்படி உணர்ந்திருக்க முடியும் என்பது தெரியவில்லை. பொதுவாக ஒரு பார்வையாளன் பார்வையில் பல கவிதைகளை அவர் எழுதியிருப்பதாக தோன்றியது.  அவர் முதலில் வாசித்த ஒரு கவிதையில் முதல் ஐந்து வரிகளை அவர் படித்தபோது  என்னால் ரசிக்க முடியவில்லை.  இது என் ரசனையின் குறைபாடாக இருக்கலாம்.

ஒரு கவிதை கேட்பவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்க முடியுமா? முடியாது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.  


Comments