Skip to main content

ஓர் உரையாடல்

ஓர் உரையாடல் 


அழகியசிங்கர்




பால்கனியிலிருந்து வேடிக்கைப் பார்ததுக் கொண்டிருந்தார் அழகியசிங்கர்.  தெருவில் தூரத்தில் ஜெகனும், மோகினியும் வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்த்து கையை ஆட்டினார்.  அவர்களும்.
வீட்டிற்குள் வந்தவுடன் முதல் கேள்வி ஜெகனிடமிருந்து.   ஒரு முக்கியமான விஷயத்திற்காகத்தான் வந்திருக்கிறோம்.

அழகியசிங்கர் :   என்ன? 
மோஹினி :  100வது இதழ் நவீன விருட்சம் குறித்துப் பேசுவதற்குத்தான்.  
அழகியசிங்கர் :  கூடிய விரைவில் வந்துவிடும்.  அதற்கான முயற்சியை கடுமையாக செய்து கொண்டு வருகிறேன்.  இதுவரை 150 பக்கங்கள் வரை டம்மி தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
ஜெகன் :  அப்படியென்றால் 200 பக்கங்கள் வரை வந்து விடுமா?
மோஹினி :   இதுவரை நீங்கள் கொண்டு வராத அளவிற்கு பக்கங்கள் அதிகம் உள்ள விருட்சம் வெளிவருகிறதா?
அழகியசிங்கர் :  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எனக்கே பயமாகத்தான் இருக்கிறது.  200 பக்கமா?  நான் எப்போதுமே மிகக் குறைவான பக்கங்களில் நம்பிக்கைக் கொண்டவன்.
(அழகியசிங்கர் அமர்ந்திருந்த அறையை அவருடைய மனைவி எட்டிப் பார்க்கிறார்.  அழகியசிங்கரைப் பார்த்து, üயாருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்,ý என்று கேட்கிறார்.)
அழகியசிங்கர் :  ஏன் ஜெகன் மோஹினியுடன்தான்.
அழகியசிங்கர் மனைவி :    யாரும் உங்கள் முன் இருப்பதாக தெரியவில்லையே..
அழகியசிங்கர் :  இதோ இந்த நாற்காலிகளில் உட்கார்ந்திருப்பது உனக்குத் தெரியவில்லையா?
அழகியசிங்கர் மனைவி : யாரும் தெரியவில்லை.  நீங்கள் சொல்ற நண்பர்களை நான் பரர்த்ததே இல்லை.  
அழகியசிங்கர் :   உன் கண்ணிற்கு அவர்கள் தெரியவவே மாட்டார்கள்.  அவர்கள் என் மானஸீக நண்பர்கள்.  என் நலம் விரும்பிகள்..விருட்சத்தில்தான் தென்படுவார்கள்.
அழகியசிங்கர் மனைவி :     100வது இதழ் விருட்சமா?
அழகியசிங்கர் :   ஆமாம். விருட்சம்தான் என் மூச்சு..
(அழகியசிங்கர் மனைவி அந்த இடத்தைவிட்டு போகிறார்..)
ஜெகன் :  சார், என்ன திடீரென்று மூச்சுன்னு டயலக் அடிக்கிறீங்க..
அழகியசிங்கர் :  நம்ப பேசறதை நம்ப மாட்டேங்கறாங்க...
மோஹினி :   நீங்க என்னமோ நினைக்கிறீங்க...இந்த அளவிற்கு உங்களுக்கு அவங்க சுதந்திரம் கொடுத்திருக்காங்க.. அதனால்தான் விருட்சம் நூறாவது இதழ் வரை வந்திருக்கிறது.
ஜெகன் :  இந்தக் காலத்திலே நம்மள மாதிரி பத்திரிகை புத்தகம்னு சுத்தறவங்களை யாருமே பொறுத்துக்க மாட்டார்கள். 
அழகியசிங்கர் :  அவங்க உலகம் வேற.. ஏன் என் வீட்டில உள்ள எல்லோருமே என் மனைவிக்குத்தான் சப்போர்ட்.  
மோஹினி :   இப்ப தமிழ்ல புத்தகம் பத்திரிகை படிக்கிறவங்க ரொம்ப குறைச்சல்.
அழகியசிங்கர் :  அன்னிக்கு ரொம்ப வருஷம் கழித்து என் அலுவலக நண்பர் ஒருவரைப் பார்த்தேன்.  அவர் கேட்டார்:  என்ன விருட்சம் இன்னும் வரதா என்று.  ஆமாம்.  எனக்கே தெரியாம 99வது இதழ் வரை வந்து விட்டது.  இப்போது 100 வரப் போகிறதுன்னு சொன்னேன்...  üஅப்படியா...ý என்று ஆச்சரியப்பட்டார்.  அவரைப் பார்த்து இன்னொன்றும் சொன்னேன் : இப்ப துரத்திக்கிட்டே இருக்கேன்.  யாரு விருட்சம் படிப்பார்கள் என்று..
ஜெகன் :  உங்கள் நண்பர் உடனே ஓடிப் போயிருப்பாரே?
அழகியசிங்கர் :  அப்படித்தான் நடந்தது....ஓடியே போய் விட்டார்..
மோஹினி :   உங்கள் பத்திரிகை அமைப்பை மாத்தறீங்களா?  
ஜெகன் :  எப்போதும் கொண்டு வர மாதிரி கொண்டு வந்தால்தான் நன்றாக இருக்கும்.
மோஹினி :  முதல்ல மாத்தத் தெரியுமான்னு தெரியணும்..
அழகியசிங்கர் :  நான் அமைப்பை மாத்தலை.  ஆனா பக்கங்களை 200ஆ கூட்டியிருக்கேன்...அவ்வளவு பக்கங்கள் சரியா வருமான்னு தெரியலை.
மோஹினி :  உங்களால் பக்கத்தைக் குறைக்க முடியாதுன்னு தோணுது..
ஜெகன் :  நான் கூட தடம்னு ஆனந்தவிகடன் பத்திரிகையைப் பார்த்தேன்... புரட்டித்தான் பார்த்தேன்.  படிக்க முடியவில்லை. 
அழகியசிங்கர் : எதையும் படிக்க வேண்டும். 
ஜெகன் :     உண்மைதான்.  
அழகியசிங்கர் :   நான் வாங்கி வைத்திருக்கும் பல பத்திரிகைகளை உடனே படிப்பதில்லை.ஆனால் பத்திரிகை உள்ளே யார் யார் எழுதியிருப்பாங்கன்னு புரட்டிப் பார்ப்பேன்..
ஜெகன் :   எதற்கும் நேரம் ஒன்று வேண்டும்...
அழகியசிங்கர் :  நேரம் மட்டுமல்ல..மூடும் வேண்டும்.  அது இல்லை என்றால் படிக்க முடியாது.  நான் கல்லூரியில படிக்கும்போது சென்னையில் உள்ள எல்லா லைப்ரரியிலும் போய் புத்தகம் எடுப்பேன்.  தியோசாபிகல் சொûஸயிட்டியில் ஒரு லைப்ரரி உண்டு..அங்கும் போவேன்.  எடுத்த வந்த எல்லாப் புத்தகங்களையும் ஒரு இடத்தில்  குவித்து வைத்திருப்பேன். வீட்டில் உள்ளவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள்.  'படிக்கவே மாட்டான்..அப்படியே கொண்டு போய் கொடுப்பான்,' என்பான் என் சகோதரன். தினமும் என் முன்னால் உள்ள புத்தகங்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன். எந்தப் புத்தகத்தை எடுத்து முதலில் படிப்பது என்பதில் குழப்பமாக இருக்கும்.  ஒரு புத்தகம் எடுப்பேன்.  புரட்டிவிடடு வைத்துவிடுவேன். அப்புறம் அவசரம் அவசரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு திருப்பிக் கொடுக்க ஓடுவேன். அப்படி கொடுக்கும்போது அமெரிக்கன் லைப்ரரி புத்தகங்களை பிரிட்டிஷ் லைப்ரரிக்குக் கொண்டு போய் விடுவேன்.  எனக்கே என்னை நினைச்சா சிரிப்பா இருக்கும்..
மோஹினி :  அப்படி கொண்டு வர புத்தகங்களில் எதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க முடியாதா....
அழகியசிங்கர் :    ஏன் முடியாது என்று தெரியாது?  சில சமயம் சில புத்தகங்களை எடுத்துப் படிப்பேன்.....ஆனால் முழுக்க முடிக்க முடியாது. பாரதியார் எழுதிய கட்டுரைகளை நான் படித்த கல்லூரியில் உள்ள லைப்ரரியிலிருந்து எடுத்துப் படித்திருக்கிறேன். பெ தூரன் தொகுத்தது.  முக்கால்வாசி நான் படிப்பது மின்சார வண்டியில்தான். 
ஜெகன் :    இப்போது எப்படி? 
அழகியசிங்கர் :   அப்போது மாதிரி இல்லை.  ஆனால் லைப்ரரி போய்ப் புத்தகம் எடுத்துப் படிப்பதில்லை... என்னிடம் உள்ள புத்தகங்களையே படிக்கிறேன்.  புதுமைப்பித்தன் புத்தகத்தை வைத்துக்கொண்டு எதாவது ஒரு கதையை எடுத்துப் படித்துவிட்டு வைத்துவிடுவேன்.  பின் மௌனி கதைகளில் எதாவது படிப்பேன்...எனக்கு எதிலும் அவசரமில்லை.  எப்ப வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் யாரிடமும் இரவல் மட்டும் கொடுக்கக் கூடாது.  புதுமைப் பித்தன் கதைகளில் ஒரு கதையைப்  படித்து முடித்தப்பின் அந்தக் கதையைப் பற்றிய குறிப்பு கதை கீழேயே எழுதி விடுவேன்.  இது 'மிஷின் யுகம்' என்ற புதுமைப்பித்தனின் சிறுகதையின் கீழே இப்படி எழுதி உள்ளேன்.  'ஓட்டலில் பணிபுரிபவர் எப்படி மிஷின் மாதிரி ஆகிறார் என்பதுதான் கதை.  திறமையாக எழுதி உள்ளார்,' என்று.  படித்தத் தேதி வியாழக்கிழமை 28.04.2016 என்று குறிப்பிட்டுள்ளேன். 
                                                                             (இன்னும் வரும்...)

Comments