Skip to main content
சோ ராமசாமியும் ஜெயகாந்தனும்



அழகியசிங்கர்



நான் எப்போதும் இரண்டு பேர்கள் மேடையில் பேசுவதை ரசிப்பேன்.  ஒருவர் சோ ராமசாமி.  இன்னொருவர் ஜெயகாந்தன்.  ஜெயகாந்தன் ஆரம்ப காலத்தில் மேடையில் இருந்துகொண்டு குஸ்திப்போடுவதைப் போல் பேசுவார்.  அவருடைய சத்தம் ஒருவிதமாக கலகலக்கும்.  அவர் கத்திப் பேசுவதைக் கேட்டால் அவருக்கு ரத்தக் கொதிப்பு நோய் இருந்திருக்கும் என்று நினைக்கத்தோன்றும்.  பேச்சு ஒருவித கலை.  பலருக்கு அது சுட்டுப் போட்டாலும் வராது.  நானும் ஒரு கூட்டத்தில் ஜெயகாந்தன் மாதிரி பேச நினைத்தேன்.  முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்து, பின் உச்சக் குரலில் கத்திப் பேச ஆரம்பித்தேன்.  அப்புறம்தான் ஒரு கேள்வி கேட்டுக்கொண்டேன்.  என்ன பேசினோம், ஏன் இப்படி கத்திப் பேச வேண்டுமென்று. எனக்கு என் நிலையை நினைத்து வெட்கமாகப் போய்விட்டது.  

இன்னொருவர் சோ ராமசாமி.  நான் அவர் கூட்டங்களில் கலந்துகொள்வேன்.  முன்பெல்லாம் எதாவது ஒரு கட்சியை ஆதரித்து அரசியல் மேடையில் பேசுவார்.  அவர் பேசுவதைக் கேட்க அதிகமாக கூட்டம் வரும்.  இயல்பாக நகைச்சுவை உணர்வுடன் அவருக்குப் பேச வரும். கூட்டத்தில் உள்ள அனைவரும் ரசிப்பார்கள்.  தி நகரில் அப்படி ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு கேட்டிருக்கிறேன்.  அவர் பேசுவதைக் கேட்கப் பிடிக்காமல், கூட்டத்தைக் கலைக்க எதாவது எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் செய்வார்கள்.  

ஒவ்வொரு முறையும் அவருடைய துக்ளக் கூட்டத்திற்குப் போவேன்.  கூட்டத்தை நடத்தும் விதமே சிறப்பாக இருக்கும். தாங்க முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும்.  சமீபத்தில் நடந்த கூட்டத்திற்குப் போயிருந்தேன்.  மியூசிக் அக்காதெமி கட்டத்தின் வெளியே நிற்க வேண்டியிருந்தது.  உள்ளே ஒரே கூட்டம்.  சோ உடல்நிலை சரியில்லாமல் அந்தக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார்.  எதிரியின் மனநிலையைப் புண்படுத்தாமல் நகைச்சுவை உணர்வுடன் பேசக் கூடியவர் சோ ஒருவர்தான்.  அதனால் எனக்கு ஜெயகாந்தின் பேச்சுப் பாணியைவிட சோ ராமசாமி பேசுவதுதான் பிடிக்கும்.  

துக்ளக் பத்திரிகை வாங்கினால், சோ எழுதும் கேள்வி பதில் பகுதியைத்தான் படிப்பேன். அதற்காகவே வாங்குவேன். மற்றப் பகுதிகள் படிக்க எனக்குப் பிடிக்காது.  அந்த  அளவிற்கு தன் கருத்தில் உறுதியாக நகைச்சுவை ததும்ப எழுதியிருப்பார்.  அவர் துக்ளக் பத்திரிகை ஆரம்பித்த விதமே நன்றாக இருந்தது.  இரண்டு கழுதைகள் பேசுவதுபோல் பத்திரிகை இருக்கும். நாம் எப்போதும் நகைச்சுவை உணர்வோடு பேசுபவர்களைப் பெரிதும் மதிப்பதில்லை.  எல்லோரும் சிரித்துவிட்டு வந்துவிடுவோம். ஆனால் எவ்வளவு பெரிய விஷயங்களை அவர் எப்படியெல்லாம் யோசிக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஜெயகாந்தான் பாணியில் கேட்பவர்கள் எல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று திட்டுகிற மாதிரி பேசுவார்.  சோ வேற மாதிரியாக கேட்பவர்கள் புரிந்துகொள்ள நகைச்சுவை உணர்வோடு பேசுவார். சோ தன் கருத்தில் உறுதியானவர்.  தைரியமாக அபத்து ஏற்பட்டாலும் பேசுவார். எழுதுவார்.  அவரை யாராவது வந்து அடிக்கப் போகிறார்களே என்று நான் யோசிப்பேன்.  ஆனால் அதற்கெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார்.  எளிதான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்.   

எனக்கு என்ன ஆச்சரியமென்றால் சோ ராமசாமியைப் பற்றியும், பெரியார் ஈவேராமசாமியைப் பற்றியும் பிரமிள் ஒரு கவிதை எழுதியிருந்தார். இருவருமே முக்கியமானவர்கள் என்பது பிரமிள் கருத்து.  எப்படி ஈவேராவுடன் சோ ராமசாமியைச் சேர்க்க முடியும் என்று யோசிப்பேன். இருவரையும் மேடைப் பேச்சு, பத்திரிகையுடன் தொடர்பு என்று சேர்க்கிறார் என்று யோசிப்பேன்.  எழுதிக்கொடுத்த அந்தக் கவிதையை எங்கோ தொலைத்துவிட்டேன்.

இன்று காலை சோ ராமசாமி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து வருந்துகிறேன்.  அவரை இழந்து நிற்கும் அவர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Comments