Skip to main content

இரங்கல் கூட்டங்கள் நடத்துவது வருத்தமான ஒன்று...



அழகியசிங்கர்

                                                                                           



பல ஆண்டுகளாக நான் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் நடத்தி வருகிறேன்.  அப்படித் தொடர்ந்து நடத்திக்கொண்டு வரும்போது, சில மாதங்கள் தொடராமல் நிறுத்தி விடுவேன்.  சில சமயம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் ஆண்டுக் கணக்கில் நின்று விடும்.  சமீபத்தில் 24 கூட்டங்கள் நடத்திய நானும் என் நண்பரும் அதைத் தொடராமல் நிறுத்தி விட்டோம்.  ஆனால் ஜøன் மாதம் திரும்பவும் நடத்த நினைக்கிறேன்.    இப்போது ஒரு கலகலப்பான சூழ்நிலை இலக்கிய உலகில் நடந்து கொண்டிருக்கிறது.    பலர் இலக்கியக் கூட்டங்களை நடத்துகிறார்கள்.  பெரும்பாலும் சனி ஞாயிறுகளில் இலக்கியக் கூட்டம் இல்லாமல் இருப்பதில்லை.   அக் கூட்டங்களில் விடாமல் ஒவ்வொருவரும் கலந்துகொண்டாலே போதும்.இந்த முயற்சியை வெற்றிகரமாக மாற்ற முடியும்.  நான் சென்னையை வைத்து இதைக் குறிப்பிடுகிறேன்.  தமிழ் நாடு முழுவதும் எதுமாதிரியான இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை.  இது ஒரு ஆரோக்கியமான போக்காக நான் கருதுகிறேன். 
என் கூட்டங்களில் இரங்கல் கூட்டங்களை நடத்துவதை நான் பெரும்பாலும் விரும்புவதில்லை.  நமக்கு நெருங்கிய எழுத்தாள நண்பர்களை நாம் பிரிந்து விடும்போது வேற வழியில்லாமல் இரங்கல் கூட்டம் நடத்த வேண்டி உள்ளது.  நாம் ஆசைப்பட்டு நடத்தும் கூட்டம் இரங்கல் கூட்டம் இல்லை.  
முதன்முதலாக நான் எப்போது இரங்கல் கூட்டம் நடத்தினேன் என்பது என் ஞாபகத்தில் இல்லை.  ஆனால் சமீபத்தில் எண்ணிக்கை அளவில் அதிகமாகவே இரங்கல் கூட்டங்களை நடத்தி விட்டேன். 
கரிச்சான் குஞ்சு என்ற எழுத்தாளருக்கு நான் ஒரு இரங்கல் கூட்டம் நடத்தினேன்.  இந்த இரங்கல் கூட்டங்களில் கலந்துகொள்ள வரும் எழுத்தாளர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கலந்து கொள்வார்கள்.  அத்தோடல்லாமல் மனம் உருகிப் பேசுவார்கள்.  சிலர்  பாதகமாகவும் பேசி விடுவார்கள்.  நாம் ஒரு இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் மறந்து போயிருப்பார்கள்.  நாம் நடத்தும் இரங்கல் கூட்டங்கள் அதுமாதிரி திசை மாறிப் போயிருந்தால் சங்கடமாக இருக்கும்    ஆனால் ஒவ்வொரு முறையும் அதுமாதிரியான கூட்டங்களை நடத்தும்போது மனம் அமைதியாக இல்லாமல் இருப்பதை உணர்வேன்.   இரங்கல் கூட்டம் நடத்தும்போது உணர்ச்சிப் பிழம்பாய் நான் உருமாறி  விடுவதால் பேசுவதை தவிர்த்து விடுவேன்.  
என்னை இரங்கல் கூட்டங்கள் நடத்துவதில் அதிக நம்பிக்கை தருபவர் என்று சிலர் கருதியிருக்கலாம். உண்மையில் நானும் சில இரங்கல் கூட்டங்களை நடத்துவதை நடத்தாமல் விட்டுவிட்டேன்.  நகுலன், காசியபன், ஸ்டெல்லா புரூஸ், ஐராவதம், டாக்டர் பஞ்சாட்சரம் செல்வராஜன் போன்றோர்கள். அவர்களெல்லாம் என் நெருங்கிய நண்பர்கள்.  வேற யாரும் இவர்களுக்கெல்லாம் கூட்டங்கள் போடவில்லை.   ஏன் நானும் கூட்டம் நடத்தவில்லை.  ஏன் என்றால் எனக்குள் ஏகப்பட்ட தயக்கம்..ஏகப்பட்ட குழப்பம்..யார் வருவார்கள் பேச என்றெல்லாம் யோசனைகள்..
102வது இதழ் நவீன விருட்சத்தை அசோகமித்திரன் நினைவாகக் கொண்டு வருவதாகத் தீர்மானித்தேன்.   எழுத்தாள நண்பர்கள் சிலரை கட்டுரைகள் அனுப்பும்படி கேட்டுக்கொண்டேன்.  பலர் அவரைப் பற்றி பல பத்திரிகைகளில் எழுதி விட்டார்கள்.  நானே மூன்று பத்திரிகைகளில் எழுதி விட்டேன்.
அரைப் பக்கம் போதும், முழுப் பக்கம் போதும் தோன்றுவதை எழுதி அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.  என் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்த எழுத்தாள நண்பர்கள் எழுதியும் அனுப்பினார்கள்.   
இதோ 102வது இதழ் வந்துவிட்டது.  யார் யார் எழுதி உள்ளார்கள் என்பதை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். எழுதியவர்களுக்கெல்லாம் என் நன்றி..அசோகமித்திரன் குறித்து எழுதி அனுப்புகிறேன் என்று கூறி எழுதி அனுப்பாதவர்களுக்கும் என் நன்றி. 
1. அசோகமித்திரன் 2. ஸிந்துஜா 3. பானுமதி ந 4. சிருஷ்ணமூர்த்தி 5. அழகியசிங்கர் 6. கிருபானந்தன் 7. வைதீஸ்வரன் 8. குமரி எஸ் நீலகண்டன் 9. ஏகாந்தன் 10. ஸ்ரீதர்-சாமா 11. தேவகோட்டை வா மூர்த்தி 12. பாவண்ணன் 13. எஸ் எம் ஏ ராம் 14. ப்ரியா ராஜ் என்கிற ராஜாமணி 15. டாக்டர் ஜெ பாஸ்கரன் 16. க்ருஷாங்கினி 17. பிரபு மயிலாடுதுறை 18. சுரேஷ் 
இந்த இதழை மே மாதமே கொண்டு வர நினைத்தேன்.  31ஆம் தேதியாகிய இன்று கொண்டு வந்து விட்டேன்.  116 பக்கங்கள் கொண்ட  இப் புத்தகம் விலை ரூ.20 தான்.  
நவீன விருட்சம் 102வது இதழ் தேவைப்படுபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.  தொலைப்பேசி எண்கள் : 9444113205, 9176613205 மற்றும் 9176653205.

Comments