Skip to main content

40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்...


அழகியசிங்கர்




கேள்வி கேட்பவர் : இப்போது என்ன புத்தகம் படித்து முடித்துள்ளீர்கள்?
நான் : அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்.
கே கே : 40 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவல் ஆயிற்றே?
நான் : ஒரு கூட்டத்தில் எனக்கு அசோகமித்திரனைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது.  அப்போது அவருடைய சில சிறுகதைகளையும், நாவல் ஒன்றையும் படித்தேன்.  கரைந்த நிழல்கள்தான் அந்த நாவல்.
கே கே :  முன்பே படிக்கவில்லையா?
நான் : படித்திருக்கிறேன்.  சினிமா சநம்பந்தமான நாவல் என்ற ஞாபகம் மட்டும் இருந்தது.  ஆனால் நாவல் முழுக்க மறந்து போய்விட்டது.
கே கே : நாவலில் என்ன விசேஷம்.
நான் : அவர் நாவலை எடுத்துக் கொண்டு போகும் பாங்கு..
கே கே : சினிமா சம்பந்தமான நாவல்தானே இது,..
நான் : உண்மைதான்.  இந் நாவலை இப்போது படித்தாலும், சினிமாவில் நடக்கும் எந்த விஷயமும் பெரிதாக மாறவில்லை என்று தோன்றும்.
கே கே : இந்த நாவலில் என்ன விசேஷம்?
நான் : பலதரப்பட்ட கதாபாத்திரங்களை அசோகமித்திரன் உருவாக்கியிருக்கிறார்.  ஒரு சினிமா அவுட்டோர் ஷ÷ட்டிங் நடப்பதிலிருந்து இந்தக் கதை ஆரம்பமாகிறது.  அதை நடத்த எத்தனைப் பேர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை துல்லியமாக விவரித்துக்கொண்டு போகிறார்.
கே கே : உண்மையில் இந்த நாவல் இரண்டு பட முதலாளிகளின் கதை.
நான் : ஆமாம்.  ஒருவர் படம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு யார் கண்ணிலும் படாமல் ஓடிப் போய் விடுகிறார். படம் எடுத்து திவாலாகி விடுகிறார்.  இன்னொரு தயாரிப்பாளர் படம் எடுத்து முடித்துவிட்டு ரிலீஸ் பண்ண முடியாமல் அவதிப் படுகிறார்.
கே கே :  சினிமாவில் சாதாரண நிலையில் இருப்பவர்களிலிருந்து தயாரிப்பாளர்கள் வரை எல்லோரையும் எழுதியிருக்கிறார்.
நான் : ஒரு நாவலில் ஏகப்பட்ட குரல்களை ஒலிக்க வைக்கிறார். அமைப்பியல் விமர்சன முறைபடி நாம் ஆசிரியரைப் பார்க்கக் கூடாது. படைப்பைப் பற்றிதான் பேச வேண்டும்.
கே கே : அமைப்பியல் முறைபடி வேற என்ன பார்க்க முடியும்?
நான்; : ஒரு படைப்பு சிறந்த படைப்பா இல்லையா என்பதை அமைப்பியல் முறை கூறாது.  ஆனால் ஒரு படைப்பில் காணப்படுகிற பல அம்சங்களை அலசி ஆராயும்.
கே கே : இந்த நாவலில் அப்படி என்ன கண்டீர்கள்?
நான் : இந்த நாவலில் யாருக்கும் முக்கியமான பாத்திரம் கிடையாது.  ஒரு இடத்தில் உதவி டைரக்டராக இருக்கிற ராஜகோபால் இப்படிப் பேசுகிறார் : ‘üசினிமாவில் எல்லாம் டெம்பரரி, பர்மனென்ட்னு கிடையாது.  எல்லாம் பர்மனென்ட்தான், எல்லாம் டெம்பரரிதான்.ý இது சினிமாவைப் பற்றிய கருத்தாக இருக்கிறது.
கே கே : இந்த நாவலில் தாவிப் போகிற தன்மை இருக்கிறது.
நான் : ஆமாம்.  முதலில் நடராஜன் என்ற கதாபாத்திரம் வருகிறது.  அடுத்த அத்தியாயங்களில் நடராஜன் என்ற பாத்திரம் வருவதில்லை.  ஆனால் அவரைப் பற்றி பேச்சு மட:டும் வருகிறது. அடுத்தது பட்டாபிராம் ரெட்டியார் வருகிறார்.  ஜயசந்திரிகாவை ஷ÷ட்டிங் அழைப்பதற்குச் கூப்பிடுகிறார்.  அவள் உண்மையில் மயங்கி விழுந்து விடுகிறாளா அல்லது நடிக்கிறாளா என்பது தெரியவில்லை. ஆனால் அதன்பின் ரெட்டியார் காணாமல் போய் விடுகிறார்.
கே கே  : கரைந்த நிழல்கள் என்ற தலைப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு கதாபாத்திரமும் கரைந்து போய்விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.
நான் : ராம ஐய்யங்காரைப் பற்றி அடுத்தது வருகிறது.  அதில் மணிமுடி என்ற தமிழ் வாத்தியாரைப் பற்றி வருகிறது.  வாரப் பத்திரிகையில் ஒன்றில் ஒரு கதை எழுத, அதை ஒரு படத் தயாரிப்டபாளர் திரைப்படமாக எடுக்க, எடுத்த படம் பல்வேறு காரணங்களார் பிரபலமாக, மணமுடி ஒரு ராசிக்கார வசனகர்த்தா என்று பெயர் பெற, அவர் வாத்தியார் வேலையை விட்டுவிட்டு அரை டஜன் பட்டு ஜிப்பாக்கள் ûத்துக் கொண்டார் என்று கிண்டலடிக்கிறார்.
கே கே : ராம ஐய்யங்கார் அவருடைய மகன் பாச்சாவைப் போய்ப் பார்க்கிற இடத்தில், பையனிடம் நிறையா வசனம் பேசுகிறார்.  இந்த இடத்தில் மகனும், அப்பாவும் பேசும்போது, ராம ஐய்யங்கார் யார் என்பதை தோலுரித்துக் காட்டி விடுகிறான் பையன்.
நான் : இன்னொன்று இந்த நாவலின் கடைசி அத்தியாயம். நாவலின் ஒன்பது அத்தியாயங்கள்  படர்கையில் சொல்லப்படுகின்றன.  பத்தாவது அத்தியாயமான கடைசி அத்தியாயத்தில் தன்மை ஒருமையில் வருகிறது.  இங்கு கதை சொல்பவன் பெயர் தெரியவில்லை.
கே கே : கடைசியாக இநித நாவலைப் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்?
நான் : சினிமாவில் ஈடுபடுகிறவர்களின் தாறுமாறான வாழ்க்கையை இந் நாவல் படம் பிடித்துக் காட்டுவதாகத் தோன்றுகிறது.  ஒரு நிறைவான நாவலைப் படித்தத் திருப்தி ஏற்படுகிறது.

Comments