Skip to main content

தயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்




அழகியசிங்கர்



தயாரிப்புக் கவிஞர் ஒருவர் தயாரிப்பு இல்லாத கவிஞரை அசோக்நகரில் உள்ள சரவணா ஹோட்டலில் சந்தித்துவிட்டார்.  தயாரிப்பு இல்லாத கவிஞர் எப்படி இவரிடமிருந்து தப்பிப்பது என்று யோசிக்க  ஆரம்பித்துவிட்டார்.   ஏனென்றால் அவரைக் கண்டாலே த இ கவிஞருக்குப் பிடிக்கவில்லை.   கவிதையே எழுதத் தெரியாது ஆனால் கவிதை எழுதுவதாக பாவலா பண்ணுகிறார் என்ற நினைப்பு த. இ.7 கவிஞருக்கு.  தயாரிப்புக் கவிஞருக்கோ யார்யாரெல்லாசூமோ கவிதைப் புத்தகம் கொண்டு வருகிறார்கள்.  இவர் அப்பாவியாக இருக்கிறாரே என்ற நினைப்பு.

"வணக்கம்.  என் புதிய கவிதைப் புத்தகத்திற்கு உங்களிடம்தான் முன்னுரை வாங்க நினைத்தேன்.."
"ஐய்யய்யோ..எனக்கு அந்தத் தகுதியே கிடையாது," என்றார் த. இ. கவிஞர்.
"ஏன் தகுதி இல்லை.  நானும் நீங்களும்தான் முதன் முதலாக எழுத ஆரம்பித்தோம்.  இதோ நான் பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளேன்.  ஆனால் நீங்கள் ஒன்றுகூட கொண்டு வரவில்லை.."
"நான் வேலையில் மூழ்கிவிட்டேன்.  வீட்டுப் பிரச்சினை வேறு.. எங்கே கவிதை எழுதுவது.."
"நீங்கள் ஒன்றிரண்டு எழுதினாலும் நன்றாக எழுதுவீர்கள்....உங்கள் திறமையை வீணடித்து விட்டீர்கள்.."
"நான் அப்படி நினைக்கவில்லை.  யார் கவிதைப் புத்தகங்கள் வாங்குவார்கள்...நாலு பேர்கள் படிப்பார்களா?"
"இதோ இந்தப் புத்தகக் காட்சிக்கு என் பத்தாவது கவிதைத் தொகுதியைக் கொண்டு வருகிறேன்..."
"அப்படியா?"
"ஆமாம்.  இரண்டே நாளில் தயாரித்துவிட்டேன்.. மடமடவென்று எழுதி.."
"உங்கள் திறமை யாருக்கு வரும்?" 
"உங்களுக்கு முன் நான் தூசுதான்.."
"கவிதைகள் எப்போது எழுதினீர்கள்?"
"இப்போதுதான்.  இரண்டு நாட்களில்..மடமடவென்று.."
"ஆச்சரியமாக இருக்கிறது..இரண்டு நாட்களில் தயாரிக்க முடிகிறது உங்களால்...மடமடவென்று எழுதி.."
"இதுவரை எத்தனைக் கவிதைகள் எழுதியிருப்பீர்கள்.."
"எண்ணவே முடியாது.. கிட்டத்தட்ட ஆயிரம் இருக்கும்.."
"உங்கக் கிட்டயே நான் வர முடியாது...உங்களுடன் பேசுவதற்கே நான் பாக்கியம் செய்திருக்கணும்."
"உங்கள் தொகுப்புகூட ஒன்று வருவதாக சொன்னார்களே?"
"ஆமாம்.  இந்த விருட்சம் ஆசிரியர்தான் அதைக் கொண்டு வருவதாகக் கூறி உள்ளார்..50 கவிதைகளை தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்.. இன்னும் எதாவது கவிதை எழுதியது கிடைக்குமா என்று கேட்டுள்ளார்..நான்தான் கொடுக்கவில்லை.  என்ன அவசரம்.  பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்."
"பொதுவா கவிதைத் தொகுதி விற்காவிட்டாலும் அவர் கவிதைப் புத்தகம் கொண்டு வருகிறாரே அவர் கிரேட்தான்.."
"உங்க கவிதைத் தொகுதி விற்றுவிடுமா?"
"எனக்கு 100 வாசகர்கள் இருக்கிறார்கள்...நான் ம் என்றால் எல்லாவற்றையும் வாங்கி விடுவார்கள்.."
"இப்போது கொண்டு வரும் கவிதைத் தொகுதி பெயர் என்ன?"
"தூறல் நின்னுப் போச்சு.."
"தூறலே இல்லை எப்படி நிற்கிறது.  பாக்கியராஜ் பட டைட்டில் மாதிரி இருக்கிறது.."
"சினிமாக்காரங்கதான் அவங்கப் படத்துக்கு நம்ம டைட்டில காப்பி அடிக்கணுமா...ஒரு மாற்றத்திற்கு நாம் ஏன் அவங்கப் பட டைட்டிலைக்  காப்பி அடிக்கக் கூடாது.."
"ஓ... கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது.  நான் அவசரமாக வீட்டிற்குப் போக வேண்டும்.  பிறகு வருகிறேன்.." என்று அவர் பதிலுக்குக் காத்திராமல் ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து கிளம்பி விட்டார் தயாரிப்பு இல்லாத கவிஞர்.
(இந்த உரையாடல் முழுவதும் கற்பனை.  யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை)

Comments